சிவகங்கை மருத்துவக் கல்லூரி 5-வது பட்டமளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், நடைபெற்ற 5-வது பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கி தெரிவித்தாவது:
தமிழக அரசு அனைத்துத்தரப்பு மாணவ, மாணவியர்களும் பயன்பெறுகின்ற வகையில், பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. அதில், அரசு பள்ளியில் சிறப்பாக பயின்று, மருத்துவப் படிப்பிற்கென அரசால் ஒதுக்கப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டினை பெற்று, தற்சமயம் மருத்துவக் கல்லூரியில் பயிலுவதற்கான வாய்ப்பினையும் மாணவ, மாணவியர்கள் பெற்றுள்ளனர்.
இன்றையதினம் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பாக பயின்று தங்களது படிப்பை முடித்துள்ள 110 மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்கிய நாளான இந்நாளில் மாணவ, மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள தலைமை பேராசிரியர் (சென்னை மருத்துவக்கல்லூரி) மரு.ஆர்.அழகப்பன், மருத்துவரீதியாக மாணாக்கர்கள் செயல்முறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஒருகாலத்தில் தொற்று நோய்தான் சவாலாக இருந்து வந்தது. தற்போது தொற்றா நோயின் தாக்கம்தான் மிகுந்த சவாலாக கருதப்படுகிறது. இவ்வகையான நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அதனை எதிர்கொண்டு பொதுமக்களின் நலனை காத்திட வேண்டும். தற்போது, இப்படிப்பை முடித்துள்ள மருத்துவர்களாகிய நீங்கள், மேலும் கூடுதலாக மருத்துவப் படிப்பை படிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு, பெரிய அளவில் பயின்று, மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும். நோயாளிகளை கையாளும் திறனை அனுபவரீதியாகவும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தாங்கள் அளிக்கும் மருத்துவத்தில் நோயாளிகளுக்கு மனதைரியத்தையும், நம்பிக்கையையும் அளித்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர்களை குணமடையச் செய்ய வேண்டும்.
தாங்கள் பயின்ற மருத்துவப் படிப்பை, முறையாக பொதுமக்களுக்கு அர்ப்பணித்து, உயிர்க்காக்கும் மருத்துவச் சேவையை சிறப்பாக மேற்கொண்டு, தங்களது பெற்றோர்களுக்கும், தங்களது ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சி.ரேவதி, துணை முதல்வர் என்.ஷர்மிளா திலகவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பி.வி.பாலமுருகன், மருத்துவ நிலைய அலுவலர் சி.மகேந்திரன், உதவி நிலைய மருத்துவர் மு.முகமது ரபீக் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu