சிவகங்கையில் புத்தகத்திருவிழா- இலக்கியத் திருவிழா: ஆட்சியர் ஆலோசனை

சிவகங்கையில் புத்தகத்திருவிழா- இலக்கியத் திருவிழா: ஆட்சியர்  ஆலோசனை
X

பைல் படம்

புத்தகத் திருவிழாவில், 120 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 110 அரங்குகள் புத்தக விற்பனைக்கும் அமைக்கப்படுகிறது

சிவகங்கை புத்தகத்திருவிழா-2023 மற்றும் இலக்கியத் திருவிழா நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை புத்தகத்திருவிழா-2023 மற்றும் இலக்கியத் திருவிழா நடத்துவது தொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில், கடந்தாண்டு புத்தகத்திருவிழா சிறப்பான முறையிலும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் நடைபெற்றது. அதனைப்போன்று இந்தாண்டும், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 27.01.2023 முதல் 06.02.2023 வரை 11 நாட்கள் புத்தக்கத்திருவிழா நடைபெற உள்ளது.

இப்புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில், காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கூட்டாக புத்தகம் வாசித்தல், இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டும், மாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பள்ளி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுப்பொருட்கள் போன்றவை இடம் பெற உள்ளன.

புத்தகத் திருவிழாவில், 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் 110 அரங்குகள் புத்தக விற்பனைக்கும், 10 அரங்குகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைக்கப்படுகிறது.

புத்தகத்திருவிழாவில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுர் எழுத்தாளர்கள் எழுதி வெளியிட தயார் நிலையில் உள்ள புத்தகங்களை, இலக்கியம் சார்ந்த கூட்டங்களின் போது வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, எழுத்தா ளர்கள் முன்கூட்டியே தங்களது புத்தகம் குறித்த பிரதியுடன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை 6382526309 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அனைத்து நிகழ்வுகள் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் செயலி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல வாகன வசதிகள், தேவையான இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் ஈடுபடுவார்கள். அவசர தேவை கருதி பொது சுகாதாரத்துறையினர் தனி அரங்கம் அமைத்து தேவையான மருத்துவ வசதிகளை வழங்க உள்ளனர்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் அடையாளமாகத் திகழும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையானப் பொருட்கள், கோட்டைகள், அரண்மனை மாதிரிகள், குறிப்பாக பாரம்பரியமிக்க உணவு வகைகள் போன்றவைகள் இடம்பெற்று, சிவகங்கையில் நடைபெறவுள்ள புத்தகத்திருவிழா-2023 மற்றும் இலக்கியத் திருவிழாவிற்கு சிறப்பு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது அறிவுச்சார்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்கும் இடமாகவும், நண்பர்களுக்கு பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையினை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும், புத்தகத் திருவிழா-2023 மற்றும் இலக்கியத் திருவிழா சிவகங்கையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதனை சிவகங்கை மாவட்ட மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் க.வானதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எம்.வீரராகவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ம.ரா.கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்