சிவகங்கை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: வென்றவர்களுக்கு அமைச்சர் பரிசு

சிவகங்கை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: வென்றவர்களுக்கு அமைச்சர் பரிசு
X

சிவகங்கை மாவட்டம்  புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில்  நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி) ஆகியோர்கள் முன்னிலையில்நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள்.

கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருதப்படும் என்ற அடிப்படையில், அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் புதிதாகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து, கல்வித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை, உண்டு உறைவிடம், இலவச பேருந்து பயண அட்டை, சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவைகளை வழங்கி, பெற்றோர்களுக்கு பொருளாதார ரீதியான சிரமத்தை முதல்வர் குறைத்தார்.

மாணாக்கர்கள் படிப்பில் மட்டுமன்றி, விளையாட்டு, கலை போன்றவைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர், தொலைநோக்குப் பார்வையுடன் பள்ளிக் கல்வித்துறையில் திட்டங்களை தீட்டி, மாணாக்கர்களிடையே கல்வி கற்பதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கென உதவித்தொகையாக மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அனைத்துத்துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர், கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு வரும் திட்டங்களின் அடிப்படையில், கல்வி பயில்வதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணாக்கர்களின் திறனை வெளிக் கொணர்வதற்கென தற்போது பள்ளிக் கல்வித் துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில், சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் சுமார் 36,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டார அளவில் பங்கு பெற்றுள்ளனர். இந்த கல்வித் திருவிழாவில் ஒவ்வொரு வகுப்புகளின் பிரிவின் அடிப்படையில் தனிப்போட்டிகளும், குழுப்போட்டிகளும் நடத்தப்பட்டு, அதில், முதல் மூன்று இடங்களை பெற்று, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில், முதலிடம் பெறவுள்ள மாணாக்கர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புக்களை பெறவுள்ளனர்.

அதில் ,வெற்றி பெறும் மாணாக்கர்கள் பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக, கல்வி சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு களையும் பெறவுள்ளனர். இதுதவிர, மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு எனது சார்பிலும், ஊக்கத்தொகையாக முதல் பரிசாக ரூ.1.00 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாணாக்கர்கள் அனைத்திலும் தலைசிறந்து விளங்கி, எதிர்கால இந்தியாவிற்கு வலுச்சேர்க்கும் விதமாக, தங்களது பங்களிப்பை அளித்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்இரா.சுவாமிநாதன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், புனித மைக்கேல் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ப.சண்முகநாதன், உதவித் திட்ட அலுவலர் ஏ.பீட்டர் லெமாயு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அருளானந்தம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) எம்.பிரிட்டோ, கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!