சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவு திருவிழா
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவான சிறுதானிய உணவு திருவிழாவினை , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் , உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ஐ முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துவக்கி வைத்து, சிறுதானிய உணவு திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது கூறியதாவது:-
பாரம்பரிய உணவு வகைகளை நாம் உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து, நம் முன்னோர்கள் நம்மிடையே எடுத்துரைத்துள்ளனர். தற்போது வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில், நாம் பாரம்பரிய உணவுகளை பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. சிறுதானிய உணவுகள் என்பது நமது உடல்நிலையை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வதற்கு அடிப்படையாக அமைகிறது. ஒவ்வொரு சிறுதானியத்திற்கும் தனி சிறப்புள்ளது. நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான உடல் உபாதைகளுக்கு தீர்வாகவும் அவை அமைகிறது. இதுகுறித்து, பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பொதுமக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நடத்திட உத்தரவிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக சிறுதானிய உணவுத்திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த உணவு திருவிழாவில், சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பள்ளி கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் தொடர்பான அனைத்து வகையான சிறுதானியங்களின் படைப்புக்களும், அதன் சிறப்புகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதன் நன்மைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட கண்காட்சி அரங்குகள் மூலம் எடுத்துரைக் கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், இங்கு சிறப்பாக நடைபெறும் இச்சிறுதானிய உணவுத்திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான சிறுதானிய உணவுகளின் மூலம் தயார் செய்யப்படும் உணவு வகைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் முழுமையாக அறிந்து கொண்டு, பாரம்பரிய உணவு வகைகளை கடைபிடித்து நமது ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
இந்த உணவு திருவிழாவில், சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சியில் சிறப்பாக பல்வேறு உணவு வகைகளை காட்சிப்படுத்தி, சிறுதானிய உணவு திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பெற்ற மதுரை சிவகாசி நாடார் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாம் இடம் பெற்ற காரைக்குடி நேஷனல் கல்லூரியை சார்ந்த மாணவர்களுக்கு ரூ.4000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் இடம் பெற்ற மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவியர்களுக்கு ரூ.3000பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மற்றும் இச்சிறுதானிய உணவு திருவிழாவில் பங்குபெற்ற அனைத்து குழுவினருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் , பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu