கோவிட்-19 பாதித்து இறந்தவர்களுக்கு கருணைத்தொகை: சிவகங்கை ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நிவாரணம் வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு, இணையத்தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின், மூலம் பரிசீலிக்கபட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், இதுவரை 660 மனுக்கள் பெறப்பட்டு 537 இனங்களுக்கு ரூ.50,000- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 54 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நாள்:20.03.2022-ல் வழங்கிய தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு வழங்கும். எனவே, கோவிட் - 19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரியகாலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu