சிவகங்கை அருகே பல்வேறு நலத்திட்டங்கள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சிவகங்கை அருகே பல்வேறு நலத்திட்டங்கள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
X
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, காஞ்சிரங்கால் ஊராட்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் முன்னிலையில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அலுவலக கட்டிட முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளம் ஆகியவைகளை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், கலைஞர் வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், ஜனநாயகத்தின் ஆணிவேராக திகழ்கின்ற கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் அனைத்து மேம்பாட்டு வசதிகளையும் மேம்படுத்திடும் பொருட்டு, அதற்கான நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் திகழ்கிறது. கிராமங்களில் அடிப்படை தேவைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அதன் காரணமாக கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்த்திடும் பொருட்டும், அனைத்து அடிப்படை கட்டமைப்புக்களை மேம்படுத்தி, தேவைகளை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் தங்களது பகுதியிலேயே நகரங்களுக்கு இணையான வசதிகளை பெறும் வகையில் மின் இணைப்புகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆராம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றினை அமைத்துதர , தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கும், கோப்புகளை பராமரிப்பதற்கும் ஒவ்வொரு ஊராட்சியிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான அலுவலகங்களை, அனைத்து நவீன இனையதள வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக தங்களது கோரிக்கைகளை எளிதில் பதிவு செய்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பேரூராட்சிக்கு இணையான மக்கள் தொகையினை கொண்ட , வளர்ந்து வருகின்ற இவ்வூராட்சிக்கென புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றியத்தில் 2021 -2022 –ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் 2022-2023 –ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.92 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளம் என, மொத்தம் ரூ.37.49 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வூராட்சியின் கூடுதல் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, தற்போது ஊராட்சியின் சார்பில் கோரிக்கைகளும் வரபெற்றுள்ளன. அப்பணிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் , செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே, அத்திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படையானதாகும்.

எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான உரிய வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில், கிராமிய நடனத்தில் இரண்டாம் இடம் பிடித்த காஞ்சிரங்கால் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டு, அம்மாணாக்கர்களை பாராட்டி ஊக்கத்தொகையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர் , திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சாந்தா சகாயராணி, வட்டாட்சியர் சிவராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்