சிவகங்கை மன்னர் அரசு கலைக் கல்லூரி பவள விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பவள விழாவில் பங்கேற்ற அமைச்சர் பெரிய கருப்பன் விழா மலரை வெளியிட்டார்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று, பவள விழா மலரினை வெளியிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), செந்தில்நாதன் (சிவகங்கை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைய மன்னர் ஆர்.மகேஷ்துரை , குத்துவிளக்கேற்றியும் சிறப்பித்தனர்.
இவ்விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசியதாவது:-
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியானது, இந்தியா சுதந்திரம் பெற்றபோது அதே ஆண்டில், சமதர்ம வாழ்விற்கு கல்வி ஒன்றே அடிப்படை என்ற உயரிய எண்ணத்திலும், அழியா செல்வமான கல்வியை எதிர்கால சந்ததியினர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையிலும் மன்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். அச்சமயம் முதல் பொதுமக்களின் பேராதரவுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. படிப்படியாக பல்வேறு வளர்ச்சியை பெற்று தற்போது 3800 மாணவச் செல்வங்கள் பயில்கின்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இக்கல்லூரியானது, நமது மாவட்டத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் உயர்கல்வி கற்பதற்கு வழிவகையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, இக்கல்லூரியில் பயின்றவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய மாணாக்கர்கள், தற்போது போட்டிகள் நிறைந்த இந்நவீன காலத்தில் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, நீங்களும் சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்திட வேண்டும்.
ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தினை உருவாக்குவதற்கு கல்வி என்பது பெரும் பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட கல்வியினை மாணாக்கர்கள் தரமான முறையில் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் வழங்கி வருகிறார். அதில், இலவச பேருந்து பயண அட்டை, மாணாக்கர்களுக்கான ஊக்கத்தொகை, கற்றலுக்கு தேவையான அனைத்துவகையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறார். முத்தமிழறிஞர் கருணாநிதி, கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் கல்விக்கான திட்டங்களை அவரது ஆட்சி காலத்தின் போது சிறப்பாக செயல்படுத்தினார். அவ்வழியில் தமிழகத்தில் தற்போது சிறப்பான ஆட்சியினை நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதை மட்டும் அல்லாது, சொல்லாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் தமிழகத்தில் புதிதாக அறிவித்து அதனை திறன்பட செயல்படுத்தி வருகிறார்.
அதில் ,பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையான திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமன்றி, குடிமைப் பணிகளுக்கு என்று அரசால் அறிவிக்கப்படும் தேர்வுகளில் நமது தமிழகத்தைச் சார்ந்த மாணாக்கர்களின் விகிதத்தை அதிகப்படுத்துகின்ற வகையில் மாதம் ரூபாய் 7,500/- வழங்கும் திட்டத்தினையும் தற்போது , தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் அறிவித்துள்ளார்.
மேலும், நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்விக்கென ரூ. 40 ஆயிரம் கோடியும், உயர் கல்விக்கென ரூ.7 ஆயிரம் கோடியும் என, மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கல்விக்கென தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இக்கல்லூரியில் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 75 ஆம் ஆண்டின் பவள விழா நிகழ்ச்சியில், கல்லூரியின் சார்பில் கூடுதல் அரங்கம், குளிர்சாதன வசதி, கணினி வசதிகள், முகப்பினை பழமையான வடிவிலேயே புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அரசின் கவனத்திற்கு அதனை எடுத்துச் சென்று துறை ரீதியாக, படிப்படியாக அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதனை இதன் வாயிலாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசால் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் மாணாக்கர்கள் அதனை தங்களது வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கு அடிப்படையாக பயன்படுத்திக் கொண்டு, சிறந்த முறையில் பயின்று, தங்களது பெற்றோர்களுக்கும் தாங்கள் பயின்ற இக்கல்லூரிக்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், சிவகங்கை நகர் மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், மதுரை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்துராமலிங்கம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, கல்லூரி முதல்வர் க.துரைஅரசன், மற்றும் துறைத்தலைவர்கள், மாணவ மாணவியர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu