சிவகங்கை அருகே பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிய அமைச்சர்

சிவகங்கை அருகே பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிய அமைச்சர்
X

சிவகங்கையில் நடந்த விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் ஊக்கத்தொகை வழங்கினார்.

சிவகங்கை அருகே பால் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.

சிவகங்கை மாவட்டத்தில 409 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 143 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் என, மொத்தம் 552 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த மொத்தம் 11,600 உறுப்பினர்களுக்கு ரூ.02.52 கோடி மதிப்பீட்டிலான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்தலைமையில், வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.


அப்போது அமைச்சர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமன்றி, விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அடிப்படையாக திகழ்ந்து வரும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையிலும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் காப்பீட்டு திட்டம், பராமரிப்பு கடனுதவி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.

மேலும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கெனவும், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பயனுள்ள வகையிலும், அதற்கான சிறப்பு அறிவிப்புகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து வருகிறார்.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் பெறப்பட்டு, பொதுமக்களாகிய நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதில் தனியார் நிறுவனங்களை விட குறைவான விலையில், தரமானதாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஒரு லிட்டருக்கு உச்சகட்ட விலையை அரசால் நிர்ணயம் செய்யப்பட்டும், அதே சமயம் லாபம் கிடைப்பதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களை தவிர்ப்பதற்கும், குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி, அவர்களுக்கான சமமான அரசாக தமிழக அரசு சிறப்பாக திகழ்ந்து வருகிறது. பால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் கிராமப்புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அவை அடிப்படையாக அமைகிறது.

மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.01.00 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பண்டிகை காலங்களில் அவர்களுக்கு பயனுள்ளதாக இவை அமைகிறது.

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை எல்லையாக கொண்டு உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 409 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 8,912 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையாக 2,01,03,857.10 லிட்டருக்கு தலா ரூ.01.00 வீதம் ரூ.2,01,03,857.10/- மதிப்பீட்டிலும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 143 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 2,688 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையாக 50,71,825.30 லிட்டருக்கு தலா ரூ.01.00 வீதம் ரூ. 50,71,825.30/- மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 552 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த மொத்தம் 11,600 உறுப்பினர்களுக்கு லிட்டர் ஒன்றிற்கு ரூ.01.00 வீதம் ரூ.2,51,75,682.40 மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடிடும் வகையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு இவ்வூக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோன்று அரசின் குறிப்பிட்ட துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தீபாவளிபண்டிகைக்கான ஊக்கத் தொகையும் அரசின் சார்பில்வழங்கப்படுகிறது.

மேலும், தற்போது திருப்புவனம் பகுதியில் இயங்கி வரும் பால் கூட்டுறவு சங்கங்களை போல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதில், திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும், கூட்டுறவு சங்கங்களும் முன்னுதாரணமாக திகழ்ந்திடும் வகையில், தங்களது பங்களிப்பினை அளித்திடல் வேண்டும்.

பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பயனுள்ள வகையில், சட்டமன்ற பேரவை அறிவிப்பின் படி, காரைக்குடி மண்டலத்தில் உள்ள பால் பதப்படுத்திடும் நிலையத்தில் 01 இலட்சம் லிட்டர் பதப்படுத்துவதற்கு ஏதுவாக, ரூ.20.00 கோடி மதிப்பீட்டிலான இயந்திரமும் வர உள்ளது.

இதுபோன்று அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) யு.வி.ராஜசேகர், துணைப்பதிவாளர் (பால்வளம்) (மானாமதுரை) ம.ஜெரினா பானு மற்றும் பால்வளத்துறை, ஆவின் துறை சார்ந்த அலுவலர்கள், திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!