சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 3-வது சுற்று தடுப்பூசிப் பணியினை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்
சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் மொத்தம் 2,12,200 மாட்டினங்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கண்டாங்கிப்பட்டி கிராமத்தில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 3-வது சுற்று தடுப்பூசிப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், கால்நடைகளின் நலன் காத்திடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மேலும், அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சார்பில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக 3-வது சுற்று கால் மற்றும் வாய் காணை (கோமாரி) தடுப்பூசி போடும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக முதல் 21 நாட்கள் தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பசுவினம் 2,11.458 மற்றும் எருமையினம் 742 என மொத்தம் 2,12,200 மாட்டினங்கள் பயன்பெறவுள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களிலுள்ள பாதுகாப்பான முறையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென நியமிக்கப் பட்டுள்ள 57 குழுவினர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசியினை, கால்நடைகளுக்கு செலுத்துவதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கலிருந்து பாதுகாத்திட முடியும். இதனால், கறவைமாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவைமாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும்.
இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்யினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடை செல்வங்களை கோமாரி நோயிலிருந்து பேணி பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டிதெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.நாகநாதன், துணை இயக்குநர் மரு.முகமதுகான், துணைப்பதிவாளர் (பால்வளம்) ஆர்.செல்வம், பொது மேலாளர், ஆவின் (காரைக்குடி) சாமமூர்த்தி, கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மந்தக்காளை, உதவி இயக்குநர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu