கீழடியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

கீழடியில்  தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஆய்வு  மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு

கீழடியில் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பகக் கட்டிடத்தினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்திட நவீன வசதிகளுடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அகழ் வைப்பகக் கட்டிடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி முன்னிலையில் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அகழாய்வுப் பணியில் கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டுநாடு கலைநயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பகக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது 99 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த அகழ் வைப்பகக் கட்டிடம் வெளிநாட்டிலுள்ள அரங்கத்தை போல், அதற்கு இணையாக நவீனவசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர், விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இப்புதிய அகழ் வைப்பகத்தினை நமது தென்மண்டலப் பகுதி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இங்கு வருகை புரிந்து, பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு மிகுந்ததாக அமையவுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கேற்றவாறு பார்வையாளர்களின் நேரத்தையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து சங்ககால தமிழர்களின் நாகரீகத்தையும், அவர்களது பெருமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநர் ம.ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story