சிவகங்கையில் சுதந்திர தின அமுத பெருவிழா: பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு
சிவகங்கையில் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் நிறைவு விழாவில், ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
75-வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் கடந்த 25.03.2022 முதல் இன்றைய தினம் (31.03.2022) வரை நடைபெற்ற அரசின் அனைத்துத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி துறை சார்ந்து அமைக்கப்பட்ட சிறந்த அரங்குகளுக்கு கேடயம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா கொண்டாட்டங்களை, தமிழகம் முழுவதும் ஓராண்டு காலம் நடத்துவதற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் நடத்தப்பட்ட பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை கடந்த 25.03.2022 அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்து. பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கடந்த 7 நாட்களாக நடைபெற்ற பல்துறை பணிவிளக்க கண்காட்சியில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து, பொதுமக்கள் எளிதில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்திய திருநாட்டின் சுநந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அனைத்துத் துறைகளின் சார்பில் மடிப்பேடுகள், கையேடுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஆகியனவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, பரதநாட்டியம், தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 28 துறைகள் சார்ந்து அமைக்கப்பட்ட அரங்குகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு கேடயங்கள் மற்றும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த 3 அரங்குகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு சிறப்பு கேடயங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ராஜசெல்வன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu