காரைக்குடியில் அரசு இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவக்கி வைப்பு

காரைக்குடியில் அரசு இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவக்கி வைப்பு
X

போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தை துவக்கி வைத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

காரைக்குடியில் அரசு இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை , காரைக்குடி, கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தொகுதி – 2, தொகுதி 2-அ மற்றும் தொகுதி-4 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வரப்பெற்றுள்ளன. தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தினந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கையைச் சேர்ந்த தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 09.04.2022 அன்று சிவகங்கையில் பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் காரைக்குடி பகுதியைச் சுற்றியுள்ள தேர்வாளர்களும் பயன்பெறும் வகையில், இப்பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் உரையாற்றிய அலுவலர்கள், பயிற்சி வகுப்பு நடத்தக்கூடிய நிறுவனர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்துமே போட்டித் தேர்வு எழுதுவதில் சிரமம் இல்லை என்பதேயாகும்.

முன்னதாக, போட்டித் தேர்வுகளில் எழுதி வெற்றி பெற்ற திறமைமிக்கவர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப் படவுள்ளன. இதில், அளிக்கப்படும் பயிற்சிகளின் அடிப்படையில் தினமும் காலை தேர்வுகள் நடத்தப்படும். அதன் பின்னர், பிற்பகலில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 10, 12-ம் வகுப்பு படிப்பை விட போட்டித் தேர்வுகள் கடினமாக கிடையாது. தேர்விற்கு தேவையானது தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். குறிப்பாக, தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். தேர்வுகள் நடைபெறவுள்ள தேதிகள் நெருங்கி வருவதால், நமக்கு நேரங்கள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. இதனை மனதில் கொண்டு நல்லமுறையில் படித்து, அதனை திருப்புதல் செய்தலும் மிகவும் அவசியம் ஆகும்.

நாம் படிப்பதில் புரிதல் இருக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை நிர்ணயிக்கும் வகையில், நான் முதல்வன் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டம் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உள்ளது.

அதனடிப்படையில், பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவுள்ள தேர்வாளர்களுக்கும், அவர்களுக்கு பயனுள்ள வகையில் திறமை மிக்கப் பயிற்சியாளர்களைக் கொண்டு இதுபோன்று பயிற்சி வகுப்புகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களையும் கௌரவிக்கும் வகையில் பாராட்டு நிகழ்வும் நடத்தப்படும். தாங்கள் மேற்கொள்ளவுள்ள பயிற்சி வகுப்பில் எவ்விதச் சிரமமின்றி மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது பல்வேறு போட்டித் தேர்வுகள் வரவுள்ளது. இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு, நல்லமுறையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு, வெற்றி பெற்று, எங்களைப் போன்று நீங்களும் அரசு அலுவலர்கள் ஆகலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குர் கா.வானதி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் டி.பிரபாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.மணிகணேஷ், காரைக்குடி நகராட்சி ஆணையர் லெட்சுமணன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கா.கேசவன், தென்றல் அகாடமி நிறுவனர் ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in agriculture india