சிவகங்கை மாவட்ட அரசு மேல்நிலை பள்ளியில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு

சிவகங்கை மாவட்ட அரசு மேல்நிலை பள்ளியில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு
X

மாணவர்கள் மத்தியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.

சிவகங்கை மாவட்ட அரசு மேல்நிலை பள்ளியில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பள்ளி வகுப்பறை, சமையற்கூடம், தொழிற்பயிற்சி கூடம், ஆய்வகக்கூடம், பணியாளர்கள் அறை, பதிவறை போன்றவற்றை பார்வையிட்டு, பள்ளி மாணாக்கர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவினை சாப்பிட்டு பரிசோதனை செய்து, மாணாக்கர்களை நேரில் சந்தித்து , கலந்துரையாடினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் தமிழக அரசு பள்ளி மாணாக்கர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன், இல்லம் தேடிக்கல்வி போன்ற திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணாக்கர்கள் பாடத்திட்டங்களை குறித்து அறிவதற்காக கல்லூரி கனவு என்னும் வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மாணாக்கர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தினை முழுக்கவனத்துடன் கற்றாலே 80 சதவிகிதம் மனதில் பதிந்துவிடும். வீட்டிற்கு வந்து பாடத்தினை மீண்டும் படிக்கும் போது 100 சதவிகிதம் மனதில் தங்கும். பள்ளிகளில் படிக்கும் போது விளையாட்டாக கவனமில்லாமல் இருப்பதை தவிர்த்து முழுஅக்கறையுடன் பாடங்களை படிக்கும் போது உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பு எளிதாகும்.

பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பாடங்களில் சேரும் தருணத்தில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்றால் மீண்டும் அதற்குரிய விளக்கத்தினை கேட்டு அறிந்து புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்வது நீண்டநாட்களுக்கு பயன்படாது. நமது மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு காலங்களில் மட்டுமே படிப்பது என்ற எண்ணத்தை தவிர்த்து தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும். அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களது திறமையினை மாணாக்கர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்திட வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள உயர்கல்வி என்ன என்பது குறித்தும் சிறந்த கல்வி நிலையங்கள் உள்ள இடங்கள் குறித்தும் மாணாக்கர்கள் அறிந்திடும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்திட வேண்டும்.

பள்ளி மாணாக்கர்களின் வருகையினை உறுதிபடுத்தி நீண்ட விடுப்புக்களில் உள்ள மாணாக்கர்களை கண்டறிந்து மீண்டும் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர் ம.பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் எஸ்.சீத்தாலெட்சுமி, தலையாசிரியர்கள் த.கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா