சிவகங்கை அருகே பள்ளி மாணவ, மாணவி களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் வழங்கல்

சிவகங்கை அருகே பள்ளி மாணவ, மாணவி களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் வழங்கல்
X

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார், அமைச்சர் பெரியகருப்பன்

தொலை தூரத்திலிருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பேருந்து பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் ,திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்ற விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு விலையில்லா, ரூ.4.79 இலட்சம் மதிப்பீட்டில், 94 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசியதாவது: முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முதலமைச்சராக இருந்த போது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியர் பள்ளியினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார்கள். இருப்பினும், மாணவர்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தினை செயல்படுத்தினார். இதன்மூலம் ஏராளமானவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சராக இருந்த அண்ணா, ஓர் ஆசிரியர் பள்ளியினை ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தினார்கள். அன்னாரின் வழியில் செயல்பட்ட கலைஞர் கருணாநிதி, அனைவருக்கும் இலவச கல்வியினை வழங்கி புதிய வரலாற்றினை உருவாக்கினார்கள்.

அதேபோல், மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை மேலும் விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவச் சமுதாயத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச் சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தொலை தூரத்திலிருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பேருந்து பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகின்றன.அதன்படி, அவர்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் , காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்தி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை அனைவரும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி, 11-ஆம் வகுப்பு பயிலும் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் பல்வேறு தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆகையால், அரசுப்பள்ளியில் மாணாக்கர்களை சேர்ப்பதனால் திறமையானவர்களிடம் கல்வி கற்கும் சூழ்நிலை மாணாக்கர்களுக்கு ஏற்படுகிறது.

தற்போது, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை தமிழ்நாடு முதலமைச்சரால், உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும்.

மேலும், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்திலுள்ள 67 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 37 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மொத்தம் 5,715 மாணவர்கள், 6,775 மாணவியர்கள் என ஆக மொத்தம் 12,490 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 53 மாணவர்களுக்கு தலா ரூ.5,175வீதம் ரூ.2,74,275 மதிப்பீட்டிலும் மற்றும் 41 மாணவியர்களுக்கு தலா ரூ.4,99 வீதம் ரூ.2,04,672 மதிப்பீட்டிலும் என மொத்தம் 94 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4,78,947 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்று, பள்ளிக் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு மாணாக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இதனை மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் பயின்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.சுவாமிநாதன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவர் பா.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சுருளிமூர்த்தி, சகாதேவன், பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் சி.சக்கரவர்த்தி, வட்டாட்சியர் வெங்கடேசன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!