மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய கலெக்டர் மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறுகையில், தமிழக அரசு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அதில், விவசாயத்திற்கு தனிகவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, என்றார்.
பட்டு வளர்ச்சித்துறை சார்பாக கூத்தாண்டண் கிராமத்தில், அமுதாராணி என்ற விவசாயி இரண்டு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்ப்பதையும், காயன்குளம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கூடாரம் அமைத்து நவீன முறையில் பட்டுப்புழு வளர்க்கப்படுவதையும், இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு ஏக்கருக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் நிகர வருமானம் பெறுவதையும் கேட்டறிந்தார். வரப்புகளில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு மற்றும் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பாக, களத்தூர் கிராமத்தில் மாயழகு எனும் விவசாயியின் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளையும், நுண்ணீர் பாசன முறையில் 0.5 ஏக்கர் சம்பங்கி பயிர் சாகுபடியினையும் பார்வையிட்டார்.
மேலும், சுந்தரநடப்பு கிராமத்தில் வடகிழக்கு பருவத்தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 41 விவசாயிகளின் 21 ஏக்கர் நெல் பயிர்களையும், வீ.புதுக்குளம் கிராமத்தில் 42 விவசாயிகளின் 38 ஏக்கர் நெல் பயிரும் மழைநீரால் சூழப்பட்டுள்ளதை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, பாதிப்பு விபரங்களை எந்த விவசாயியையும் விடுபடாமல் கணக்கீடு செய்து இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு வேளாண்மை பொறியியல் துறை மூலம் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.476 லட்சம் மதிப்பீட்டிலும், ஐந்து துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.190 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், மதகுபட்டி மற்றும் பாகனேரி கிராமங்களில் வேளாண்மை பொறியியல் துறையால் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடன் நடவடிக்கை எடுக்குமாறு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் தோட்டக்கலைத்துறை இடுபொருட்களையும் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட நடவடிக்கை எடுத்திடுமாறும், மாவட்டத்தில் உள்ள 12 முதன்மை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 9 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுபொருட்களும் தேவையான அளவு இருப்பு வைத்து விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுத்திடுமாறும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள் (மாநிலத்திட்டம்) பன்னீர்செல்வம், (மத்திய திட்டம்) சுருளிமலை, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் டேனிஸ்டன், பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu