ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணி: அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர்

ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணி:  அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர்
X

  ஒ.சிறுவயல் கிராமம் அருகே தேனாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணியை  அடிக்கல் நாட்டி வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  

அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்:

Dam construction across the river Minister laying the foundation stone

சிவகங்கை மாவட்டம் ஒ.சிறுவயல் கிராமம் அருகே தேனாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்:

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், காரைக்குடி வட்டம், ஒ.சிறுவயல் கிராமம் அருகே, தேனாற்றின் குறுக்கே ஒய்யகொணடான் கண்மாய்க்கு பாசன வசதி அளித்திடும் பொருட்டு, அணைக்கட்டு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட பணியினை துவக்கி வைத்தார்.

நிகழ்வின் போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்தரப்பு மக்களும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், அனைத்துறைகளையும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டு வருகிறார். அதிலும் ,குறிப்பாக, வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சிவகங்கை மாவட்ட மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், ஏராளமான அதிக விளைநிலைங்களையும் ஏரி, குளம், கண்மாய்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. மேலும், பாலாறு, தேனாறு, வைகையாறு, மணிமுத்தாறு போன்ற ஆறுகள் சிவகங்கை மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இருப்பினும், கடைமடை பகுதியாக இருப்பதனால் போதுமான அளவு நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லாமல் வறட்சி சூழ்ந்த மாவட்டமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மக்களின் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் இந்தாண்டு 7 தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளன. ஏற்கெனவே, 4 தடுப்பணை கட்டும் பணி துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தடுப்பணையானது 5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. 380 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறவுள்ளன. 7 கண்மாய்களுக்கு இதிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் ,மறைமுகமாக இப்பகுதிகளிலுள்ள அரண்மனைப்பட்டி, பலவான்குடி, ஒ.சிறுவயல், குன்றக்குடி, பாதரக்குடி போன்ற கிராமங்கள் பாசன வசதி பெறவுள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு இதற்காக 1.42 இலட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இத்திட்டத்தில், தடுப்பணை, மணல்போக்கி கட்டுதல் மற்றும் ஒய்யகொண்டான் கண்மாய்கும் மற்றும் சிறுவயல் கண்மாய்க்கும் புதிய தலைமதகுகள் கட்டுதல், வெள்ளக்கரைகளை உயர்த்தி புனரமைத்தல், கால்வாய் மராமத்து பணி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, வேளாண் சார்ந்த தொழில்களுக்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகளுக்கு போன்ற கால்நடைகளுக்கும் கூடுதல் நீர் ஆதாரமாக அமையும். 2006-2011-ஆம் ஆண்டு காலத்தில் தமிழக அரசால் காவேரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக பணியில் தாமதம் ஏற்பட்டது.

இத்திட்டமானது, 4 மாவட்டங்களை உள்ளடக்கிய திட்டம் என்பதால் நிலம் எடுப்பு, கையகப்படுத்துதல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி செயல்படுத்தி வரும் திட்டங்களால் வேளாண் பெருங்குடி மக்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசால் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பொதுமக்கள் தங்கள் நல்ஆதரவினை வழங்கிட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) எம்.கார்த்திகேயன், கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை, உதவி செயற்பொறியாளர்கள் மு.பஞ்சவர்ணம், ம.சங்கர், எம்.சீனிவாசன், கே.விக்னேஸ்வரன், விசரவணன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், உதவிப்பொறியாளர்கள் சி.பாலமுருகன், என்.கலைவாணி, கே.பிரகாஷ், ஆனந்த மரியவளவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பி.ராதா பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத்தலைவர் பிஆர்.குழந்தைவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!