சிவகங்கை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் காணொளிக்காட்சி வாயிலாக ரூ.28.03 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கப்பட்டது
அதனைத்தொடர்ந்து, திருப்புவனம் வட்டம், ஏனாதி பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர், சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், காணொளிக்காட்சி வாயிலாக முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, திருப்புவனம் வட்டம், ஏனாதி பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, வேளாண் சார்ந்த பல்வேறுத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்.
மேலும், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடும் வகையில், மண் வளத்தை மேம்படுத்துதல், நவீன உத்தியினை கையாளுதல், விதை, நுண் ஊட்டச்சத்து, உரங்கள் ஆகியவைகளை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், பயிர்க்கடன் வழங்குதல், நிவாரண உதவித்தொகை வழங்குதல், வேளாண் இடுபொருட்கள் வழங்குதல், கடனுதவியுடன் கூடிய மானியத்தொகை, நெல் நடவு இயந்திரங்கள், களை எடுக்கும் கருவிகள் வழங்குதல், கூட்டுப்பண்ணையத் திட்டம் போன்ற பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.
வேளாண்மைத்துறையில் பாரம்பரிய விவசாயப்பணிகளை திறம்பட மேம்படுத்தும் வகையில், வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வழங்கி விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்களை வழங்க திட்டமிட்டு, அதன்படி வேளாண்மைத்துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் பொறியியில்துறை, தோட்டக்கலைத்துறை என முப்பெரும் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விழிப்புணர்வுகளை வழங்கி இயற்கை விவசாயப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேவையான நலத்திட்ட உதவிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இயற்கை விவசாயம் மூலம் அதிக இலாபம் பெறும் பாரம்பரிய நெல் சாகுபடி முறையினை விவசாயிகள் கையாண்டு, அதன் மூலம் இலாபம் ஈட்டி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் சாகுபடியினை முறையாக சேமித்து பயன்பெறும் வகையில், தமிழக அரசால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், மேற்கூரையுடன் நவீன சேமிப்புத்தளங்கள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு, விவசாயிகளின் நலன் காக்கின்ற வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத்தளங்களை திறந்து வைத்து, புதிய செயல்முறை கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார்கள்.
அதில், சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டம், ஏனாதியில் ரூ.4.23 கோடி மதிப்பீட்டிலும், காரைக்குடி வட்டம், பள்ளத்தூரில்; ரூ.12.97 கோடி மதிப்பீட்டிலும், மற்றும் மானாமதுரை வட்டம், சிப்காட்டில் ரூ.10.83 கோடி மதிப்பீட்டிலும் என மேற்கண்ட 3 பகுதிகளில் மொத்தம் ரூ.28.03 கோடி மதிப்பீட்டிலும் புதியதாக கான்கீரிட் தளத்துடன் கூடிய கட்டப்பட்டுள்ள மேற்கூரைகளை காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தும்,
மேலும், காளையார்கோவில் வட்டம், சிலுக்கப்பட்டியில் ரூ.4.03 கோடி மதிப்பீட்டிலும், சிங்கம்புணரி வட்டம், சிறுமருதூர் கிராமத்தில் ரூ.4.97 கோடி மதிப்பீட்டிலும் என, மேற்கண்ட பகுதிகளில் மொத்தம் ரூ.9.00 கோடி மதிப்பீட்டிலும் செயல்முறை கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கும் காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்குரிய இலாபம் முழுமையாக கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், தமிழக அரசால் இதுபோன்ற திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள்; வாணிபக்கழகம்) அருண்பிரசாத், உதவி செயற் பொறியாளர் பூமிநாதன், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழுத்துணைத்தலைவர் மூர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் நீலமேகம் (ஏனாதி), செல்வராணி (அரசனூர்) மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu