முதலமைச்சர் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை: அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
சிவகங்கையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
சிவகங்கையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர், தென் மண்டல மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு 05.03.2023 மற்றும் 06.03.2023 ஆகி இரண்டு நாட்கள் வருகை புரிவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள், துறைரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயலாக்கங்கள் ஆகியன குறித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், கலந்தாய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், சிறப்பான பணிகளை அனைத்துத்
துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது, ஒவ்வொரு அரசு அலுவலரின் தலையாய கடமையாகும்.அரசின் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகள், பணிகளின் முன்னேற்றம் அதன் செயல்பாடுகள் ஆகியன குறித்து , தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டல வாரியாக, ஆய்வுக்கூட்டமும் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், தென் மண்டல மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு 05.03.2023 மற்றும் 06.03.2023 ஆகிய இரண்டு நாட்கள் வருகை புரியவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , சிவகங்கை மாவட்டத்தில் 05.03.2023 அன்று, உலகளவில் சிவகங்கை மாவட்டத்திற்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், சங்ககால தமிழர்களின் நாகரித்தை உலகளவில் தெரியப்படுத்துகின்ற வகையிலும், பிரமாண்டமாக கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியத்தினை திறந்து வைத்து சிறப்பித்திடவும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் 3-வது ஆய்வுக்கூட்டமாக 06.03.2023 அன்று மதுரையில் - சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான முதல்நிலை அலுவலர்கள் ஆகியோர்களுடன் திட்ட செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளவுள்ளார.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்துத் துறைகளின் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பணிகளின் முன்னேற்றம் அதன் செயல்பாடுகள் ஆகியன குறித்தும், முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்வதற்கென திட்டமிட்டு, அதன்படி, இன்றையதினம் இக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை பொறுத்தே, அடிப்படையாக அமைகிறது. அதனடிப்படையில் கடந்த 20 மாதங்களாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசின் வாயிலாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அத்திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் , தேர்தல் சமயத்தில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் தற்சமயம் வரை 85 சதவிகிதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்யும் முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர், திகழ்ந்து வருகிறார்கள். பொதுமக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமன்றி, சட்டம், ஒழுங்கும் முறையாக செயல்படும் வகையில் ஒரு சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள், தகுதியான நபர்களுக்கு கால தாமதமின்றி உரிய நேரத்தில் கிடைக்கப் பெற செய்கின்ற வகையில், அரசு அலுவலர்கள் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், எண்ணத்திற்கு செயல்வடிவம் அளித்திடும் வகையில், மக்கள் நலப்பணிகளில் அவருக்கு உறுதுணையாக அரசு அலுவலர்கள் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இக்கூட்டத்தின் வாயிலாக, துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் ஆகிய குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக புள்ளி விவரங்களுடன் எடுத்துரைக்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர்,வருகின்ற 05.03.2023 மற்றும் 06.03.2023 ஆகிய நாட்களில் மேற்கொள்ளவுள்ள அரசு நிகழ்ச்சி களில், சிவகங்கை மாவட்டத்தின் பங்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.இரா.சிவராமன் மற்றும் அனைத்துத் துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu