சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடை கால ஓவிய பயிற்சி

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடை கால ஓவிய பயிற்சி
X

 ஓவியப் பயிற்சி முகாமில், கலந்து கொண்ட மாணாக்கர்களின் ஓவியங்கள் இடம் பெற்ற ஓவியக் கண்காட்சி, சிவகங்கை புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கோடைகால உண்டு உறைவிட ஓவியப்பயிற்சி முகாமில் பலவகையான ஓவியங்களை வரைந்து தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர்

இலவச கோடைகால உண்டு உறைவிட ஓவியப் பயிற்சி முகாமில், கலந்து கொண்ட மாணாக்கர்களின் ஓவியங்கள் இடம் பெற்ற ஓவியக் கண்காட்சியில், சிறப்பான இடங்கள் பெற்றுள்ள மாணாக்கர்களுக்குபரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி இலவச கோடைகால உண்டு உறைவிட ஓவியப் பயிற்சி முகாமில், கலந்து கொண்ட மாணாக்கர்களின் ஓவியங்கள் இடம் பெற்ற ஓவியக் கண்காட்சி, சிவகங்கை புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், சிறப்பான இடங்களைப் பெறும் வகையில் ஓவியங்கள் வரைந்துள்ள மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில், 2022-2023-ஆம் கல்வியாண்டில்,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சார்ந்த 8 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணாக்கர்கள், கீழக்கண்டனி இலவச கோடைகால உண்டு உறைவிட ஓவியப் பயிற்சி முகாமில், பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து, தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணாக்கர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான சான்றுகளில் ஒன்றாக இந்த ஓவியப் பயிற்சி முகாம் திகழ்கிறது.

இந்த கோடைகால விடுமுறையை மாணாக்கர்கள் பயனுள்ளதாக ஆக்கிடும் வகையில், இந்த ஒவியப் பயிற்சியில் கலந்து கொண்டு, மாணாக்கர்கள் தங்களின் சிந்தனையில் உதித்த ஆக்கப்பூர்வமான ஓவியங்களை வரைந்து, ஓவியம் என்பது மொழியில்லாமல் பேசக்கூடிய கலை என்பதனை உணர்த்திடும் வகையில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஓவியத்திற்கும் தனிச்சிறப்பு உள்ளது. அதனை, கலைநயத்துடன் தாள்களில் வரைந்தும், சிலர் மண்பாண்டங்களில் வரைந்தும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்களது திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதில், சிறந்து விளங்கிய சில ஓவியங்களை, சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அரங்கத்தில் நிரந்தரமாக நிறுவி காட்சிப்படுத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, இனிவரும் காலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று ஓவியப் பயிற்சி முகாம்கள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்றையதினம் இப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சியினை பொதுமக்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணாக்கர்கள் கண்டுகளித்திடும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஓவியத்திறன் மட்டுமன்றி, தங்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு உட்பட பல்வேறு தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த நவீனக்காலக் கட்டத்தில் நமது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் பயிலுகின்ற ஒவ்வொரு மாணாக்கர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர உறுதுணையாக இருந்திட வேண்டும். மாணாக்கர்களும் தங்களுக்கான நேரத்தை பயனுள்ளதாக இருந்திடும் வகையில், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சிறந்த ஓவியங்களாக சம்பந்தப்பட்ட துறை ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓவியங்களை வரைந்துள்ள மாணாக்கர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், மேலும், இதில் கலந்து கொண்டுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் பங்கு பெற்றமைக்கான சான்றிதழ்களும், மாணாக்கர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து, இதில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களைமாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) சீதாலெட்சுமி, பள்ளி தலைமையாசிரிகள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!