சிவகங்கை மாவட்டத்தில், சீமைக் கருவேல் மரங்கள் அகற்றும் பணி:அமைச்சர் தொடக்கம்
திருப்பத்தூர் பெரிய கண்மாயில், சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திருப்பத்தூர் பெரிய கண்மாயில், சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாயில் நீர்வளத்துறை சார்பில், தனியார் வங்கியின் பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதி பங்களிப்புடன், மேற்கொள்ளப்படவுள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்துவாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகள் ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளம், குட்டை, வரத்துவாய்க்கால், சாலை பகுதிகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதில், தனியார் நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதியின் பங்களிப்புடன் மேற்கொள்ளும் பொருட்டு சிவகங்கை மாவட்ட வங்கியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளை சீரமைக்கும் நடவடிக்கைபட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக திருப்பத்தூர் பெரியகண்மாயில் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்டு பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.சீமைக்கருவேல் மரங்கள் வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவதால் தாவரங்களுக்கு போதிய நீர் கிடைக்காமல், விவசாயம் மற்றும் மற்ற செடிகள் தழைக்கா வண்ணம் நிலமும் பயனற்ற நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.மேலும், கால்நடை தீவனங்களுக்கான புல்களை வளரவிடாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இது குறித்து, பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளை அகற்றவும் குளம், ஏரி போன்றவற்றை ஆக்கிரமிப்பு இல்லாத நீர்நிலைகளாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையும் செய்யப்படுகிறது.
திருப்பத்தூர் பெரிய கண்மாயை பொறுத்த வரையில், மருதுபாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கண்மாய் ஆகும். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுக்காவில் உள்ள முடிமலை, கரந்தமலை, களவற்காடு வனப்பகுதியில் பாலாறு உற்பத்தியாகி, நத்தம் அருகில் உள்ள செந்துறை கிராமத்திலிருந்து ஆறாக வடிவு பெற்று திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் தென்கிழக்காக பாய்ந்தோடி முடிவில் திருப்பத்தூர் பெரியகண்மாவை வறண்டு வருகிறது. திருப்பத்தூர் பெரியகண்மாயின் கரையின் நீளம் 2520 மீட்டர் ஆகும். இதன் மூலம் பாசன வசதி அளிப்பதற்கென 4 மடைகள் உள்ளது. இக்கண்மாயின் பாசனப்பிரப்பு 1023.93 ஏக்கர் (414.38 ஹெக்டர்) ஆகும். 75 மில்லியன் கனஅடி நீர்தேக்கும் திறன் கொண்ட இக்கண்மாயின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு 3.08 சதுரகி.மீ (1.93 சதுரமைல்) ஆகும். உபரிநீர் செல்வதற்கு மூன்று கலங்குகள் மற்றும் 1 திறந்த வென்ட் ஆகிய கட்டமைப்புகளும் உள்ளன. இக்கண்மாயின் உபரிநீர் மனைய கண்மாய்க்கு செல்கிறது.
பாலாற்றில் இருந்து வரும் வரத்துக்கால்வாயின் நீளம் 1300 மீட்டர், அகலம் 7.50 மீட்டர் ஆகும். ஒசுவன் கண்மாயிலிருந்து வரும் உபரிநீர் கால்வாயின் நீளம் 2300 மீட்டர், அகலம் 5 மீட்டர் ஆகும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கண்டவராயன்பட்டி அணைக்கட்டிலிருந்து ஒசுவன் கண்மாய் மற்றும் பிளவக்கண்மாய் வழியாக ஆண்டு முழுவதும் நீர் பெறப்பட்டு கண்மாய் முழுவதுமாக எட்டியது. இக்கண்மாயிலிருந்து தற்சமயம் இரண்டு முறை சாம்பன் ஊரணிக்கும் மற்றும் சீதளி ஊரணிக்கும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் பெரியகண்மாயில் உள்ள சீமைக்கருவை மரங்களை அகற்றி சீரமைக்கப்படுவதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கப்பட்டு, விவசாயப் பணி தேவைகள், குடிநீர் தேவைகள் மேம்படுவதோடு, கால்நடைகளுக்கும் கூடுதல் நீர் ஆதாரம் கிடைப்பதற்கு வழிவகை ஏற்பட்டு, இதன்மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைகிறது என்றார் கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.
இக்கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் கோகிலாராணி, மானாமதுரை நகர்மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, ஆவின் தலைவர் (பால் உற்பத்தியாளர் ஒன்றியம்) சேங்கைமாறன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை, மணிமுத்தாறு, வடிநிலக்கோட்டை, தேவகோட்டை) டி.சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, உதவி செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநில உபகோட்டம், திருப்பத்தூர்) எம்.சங்கர், உதவியாளர்பொறியாளர் பேரூராட்சிகள்) ரங்கராஜன், திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இராதாகிருஷ்ணன், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணன், மேலாளர்கள் இராமலிங்கம், கண்ணதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu