புகைப்படக் கண்காட்சி வாகனத்தை தொடக்கி வைத்த ஆட்சியர்
புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழா புகைப்படக்கண்காட்சி வாகனத்தினை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடக்கி வைத்தார்
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்து, அவரது மார்பளவுச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக்கண்காட்சியினை தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
28.04.2022 அன்று திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில், திருப்பத்தூர் நா.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 29.04.2022 அன்று சிவகங்கை கல்வி மாவட்டத்தில் கீழக்கண்டனி அரசு உயர்நிலைப்பள்ளி, கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியப் பள்ளிகளில் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரும் புகைப்படக்கண்காட்சி மூலமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.
எனவே, சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நகரும் புகைப்படக்கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு வ.உ.சிதம்பரனார் வீர வரலாற்றையும், தியாகங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.மணிவண்ணன், ஊராட்சி ஒன்றியத்தலைவர் பா.மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், ஒருங்கிணைப்பு உதவி திட்ட அலுவலர் சீதாலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி, சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu