குருவிக்குஞ்சுகளை காப்பாற்ற 35 நாட்கள் இருளில் மூழ்கிய கிராமம்

குருவிக்குஞ்சுகளை காப்பாற்ற 35 நாட்கள் இருளில் மூழ்கிய கிராமம்
X

கூடு கட்டியிருந்த மெயின் சுவிட்ச் கம்பம்.

2020ம் ஆண்டு பொது முடக்கத்தின்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் பறவைக்காக தெரு விளக்கை அணைத்த நெகிழ்ச்சி சம்பவம்.

2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முதல் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் சிவகங்கை மாவட்டம், பொத்தக்குடி கிராமத்தில் நடந்த சுவையான சம்பவம் இது. அந்த கிராம மக்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட புல்லரிக்கும் சம்பவம்.

பொத்தக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கருப்பு ராஜா என்ற இளைஞர்தான் அப்பகுதியில் தெரு விளக்குகளை இயக்குவார். லாக் டவுன் காலத்தில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தனர். எல்லோரும் டிவி பார்ப்பது, சிறுவர்கள் மொபைலில் கேம் விளையாடுவது என்று மின்சாரத்தேவை அதிகரித்திருந்தது.

குருவியை காப்பாற்ற முயற்சி எடுத்த கருப்புராஜா.

ஒருநாள் பகல்பொழுதில் தெருவிளக்கு கம்பத்தின் சுவிட்ச் போர்டுக்குள் ஒரு பறவை கூடு கட்டுவதை ராஜா கண்டார். ஓரியண்டல் மாக்பி-ராபின் என்ற பெயர்கொண்ட அந்த பறவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக, 35 நாட்கள் கிராமத்தின் தெரு விளக்குகளை மக்கள் பயன்படுத்தவில்லை. அந்த கிராமமே இருளில் மூழ்கிக்கிடந்தது.

அந்த சம்பவம் குறித்து கருப்பு ராஜா கூறியதாவது :

எங்க ஊரில் 35 தெரு விளக்குகள் இருக்கு. அதில் மெயின் சுவிட்ச் பொருத்தப்பட்ட தெருவின் முடிவில் எனது வீடு உள்ளது. சிறுவயதில் இருந்தே மாலை 6 மணிக்கு ஸ்விட்சை ஆன் செய்து காலை 5 மணிக்கு அணைத்து விடுவேன்.

ஒரு குஞ்சு பொரித்திருந்தபோது.

லாக் டவுன் சமயத்தில் ஒரு நாள் மதியம் வீட்டை விட்டு வெளியே வந்த போது, ஸ்விட்ச் போர்டின் உள்ளேயும் வெளியேயும் ஒரு சிறிய நீலநிற பறவை பறப்பதைக் கண்டேன். அந்த பறவை மீது ஆர்வம் ஏற்பட்டு அருகில் சென்று பார்த்தேன். அந்த பறவை குச்சிகள் மற்றும் வைக்கோல்களை சேகரித்துக்கொண்டிருந்தது. அது என்ன பறவை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது கூடு கட்டிக் கொண்டிருந்தது மட்டும் எனக்குத் தெரிந்தது.

அந்த இடத்தில் அந்த பறவையை எந்தத் தடையும் இல்லாமல் அந்த இடத்தில் தங்கச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். அந்த பறவை முட்டையிட்டு தனது குஞ்சுகளுடன் பாதுகாப்பாக செல்லவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஆழமாக ஏற்பட்டது. அதற்கு தீர்வு காண, கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் செய்தியை பரப்பினேன். கிராம பஞ்சாயத்துக்கு விஷயத்தை எடுத்துச் சென்றேன்.

அடைகாக்கும் ராபின் பறவை

பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், அந்த கருப்புராஜா பையன் பறவை கூடு கட்டியிருக்கும் மெயின் சுவிட்ச் வயரை அறுத்துவிடச் சொன்னார். ஆச்சர்யப்பட்ட நான் ஒப்புக்கொண்டேன். லாக்டவுன் காலத்தில், தங்குவதற்கு இடம் இல்லாமல் பலர் தெருக்களில் தவிப்பதை நான் பார்த்தேன். குருவிக்கும் இதே நிலைமையை கொடுக்க மனமில்லாமல் மின்கம்பியை அறுத்துவிட சம்மதித்தேன் என்றார்.

இதனால், குருவி முட்டையிட்டு குஞ்சுபொரித்து பெரிதாகும் வரையிலான 35 நாட்கள் அந்த கிராமம் தெரு விளக்குகளை பயன்படுத்தாமல் இருளில் மூழ்கிக் கிடந்தது. அந்த பறவைக்காக மக்கள் செய்த தியாகம் அது.

கூடு கட்டியிருந்த மெயின் சுவிட்ச்

இந்த சம்பவம் ஒரு சிறிய பறவையைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால், இந்த சூழ்நிலையில் அந்த கிராமவாசிகளின் தியாகம் போற்றத்தக்கது. இன்று மக்கள் மனிதனைப் பற்றியே சிந்திப்பதில்லை. ஆனால், பொத்தக்குடி கிராமவாசிகள் பறவையைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுள்ளனர். மனிதநேயத்திற்கான நெகிழ்ச்சிமிகு சம்பவம் என்பதால் மீண்டும் வாசிப்போம். இதற்காக தமிழக முதல்வர் அந்த கிராம மக்களை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!