சிவகங்கையில் கதர் விற்பனையை துவக்கி வைத்தார் அமைச்சர் பெரிய கருப்பன்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் இன்று சிவகங்கையில் கதர் விற்பனையை துவக்கி வைத்தார்.
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தி,கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர்ப்பகுதியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய விற்பனை துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து பேசினார்.
விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த தின விழா இன்றைய தினம் இந்தியா முழுவதும் வெகுச்சிறப்பாக எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கதர் ஒரு வாழ்க்கைத் தத்துவம். கதர் என்பது வெறும் நூல் இலைகளால் ஆன துணி மட்டுமல்ல அது சுதந்திர போராட்ட காலத்தில் போராட்ட வீரர்களுக்கு கிடைத்த ஒரு பேராயுதம். அண்ணல் காந்தியடிகள் சுதேசிப் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சுதந்திர போராட்ட ஆயுதமாக கையால் நூற்கும் இராட்டையை பயன்படுத்தி, கதர் நெசவில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்தி அன்னிய துணிகளை தீயிட்டு கொளுத்தினார். கதர் இன்றைய கணினியுகத்தில் கோடான கோடி அடிதட்டு மக்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம். கதர் தொழிலால் வேலையில்லா திண்டாட்டத்தை விரட்டியடிக்க முடியும் என்பதை செயல் வடிவில் நிரூபித்து காட்டியவர் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் ஆவார்.
நீங்கள் அணியும் கதராடைகளால் பல அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடக்கிறது என்பதை உணருங்கள். இன்று நீங்கள் வாங்கும் கதராடைகளால் ஏழை மக்களின் எதிர்காலம் சிறப்பாகிறது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தமிழ்நாட்டில் பல இலட்சக்கணக்கான ஏழை எளிய நூற்போர்இ நெய்வோர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின், பொருளாதார வளர்ச்சிக்கும் பேருதவி செய்து வருகிறது.
எனவே, அண்ணல் காந்தியடிகளின் சுதந்திர போராட்ட கால சின்னமாகத் திகழும் இக்கதர் ஆடையினை அனைவரும் வாங்கி அணிய வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமக்களின் தலையாய கடமையாகும். தேசிய தினங்களாகிய சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகளின் பிறந்த தினம் மற்றும் தேசியத் தலைவர்களின் நினைவு தினம் ஆகிய தினங்களில் கதராடை அணிந்து நெசவாளரின் குடும்ப முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
நீங்கள் ஆடைகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையில் ஒரு சதவீதம் கதராடைகளுக்கு செலவு செய்தாலே பல ஏழை எளிய நூற்போர் நெய்வோர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்க இயலும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தூய கதராடையினை அணிந்து மகிழ்வுடன் கொண்டாடுங்கள். இதுவே நம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றி கடனாகும்.
இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
பின்னர், கதர் விற்பனை மையத்தில் நடப்பாண்டிற்கான முதல் விற்பனையை , கூட்டுறவுத்துறை அமைச்சர் துவக்கி வைத்து, கதர் துணி இரகங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், உதவி இயக்குநர்கள் வ.ரகுநாத் (கதர் கிராம தொழில்கள்), ஒய்.நல்லதம்பி, கதர் ஆய்வாளர் வே.சரோஜா,கதர் அங்காடி மேலாளர் ப.பொன்ராஜு, கதர் உதவியாளர் வே.சுசீலா, சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu