சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

Sivaganga District - சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு செய்தார்.

Sivaganga District -சிவகங்கை மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , காளையார்கோவில் மற்றும் இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட செங்குளம் ஊராட்சியில் கண்மாய் தூர்வாரும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் துவக்கி வைத்தார்.

நிகழ்வின் போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மழைநீரினை முழுவதுமாக சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடும் வகையிலும், தமிழகத்தினை நீர் ஆதாரமுள்ள மாநிலமாக உருவாக்கிடவும், நீர்வளத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில், உள்ள சருகனியாறு வடிநிலக்கோட்டம், மணிமுத்தாறு வடிநிலக்கோட்டம், கீழ்வைகை வடிநிலக்கோட்டம் மற்றும் பெரியாறு பிரதானக்கால்வாய் வடிநிலகோட்டத்தின் கீழ் உள்ள 1,460 கண்மாய்களும், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 4,261 கண்மாய்களும் என மொத்தம் 5,721 கண்மாய்கள் உள்ளன. அதேபோல், வைகையாறு, தேனாறு, பாலாறு, மணிமுத்தாறு போன்ற ஆறுகளும் மாவட்டத்தினை கடந்து செல்கின்றன. இருப்பினும் கடைக்கோடி பகுதியாக இருப்பதால் வேளாண் நிலங்கள் அதிகமாக இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத சூழல் இருந்து வந்தன. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள். நீர் பற்றாக்குறை மாவட்டம் என்ற நிலையினை மாற்றி நீர்வளம் உள்ள மாவட்டமாக உருவாக்கிட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர், சிவகங்கை மாவட்டத்திற்கு 08.06.2022 அன்று வருகை புரிந்த பொழுது விரகனூர் மதகணையின் கீழ் உள்ள இடது மற்றும் வலது பிரதான கால்வாயினை 27 கோடி ரூபாய் மதிப்பிட்டிலும், திருப்பத்தூர் வட்டம் விறுசுளி ஆற்றின் குறுக்கே கண்டவராயன்பட்டி அணைக்கட்டு, நெடுமறம் தடுப்பணை 3.24 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள லெசிஸ் கால்வாய் மற்றும் அதன் துணைக்கால்வாய்களை 4.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை மற்றும் காரைக்குடி வட்டங்களில் உள்ள ஜமீன்தார் காலத்திய 42 கால்வாய்களை 24.04 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; என மொத்தம் ரூ.58.83 கோடி மதிப்பீட்டிலான புணரமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

தற்பொழுது, சருகனியாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட 17 கண்மாய்களும், மணிமுத்தாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட 7 கண்மாய்கள் என மொத்தம் 24 கண்மாய்கள் 16.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் முதற்கட்டமாக, அதனடிப்படையில் காளையார்கோவில் வட்டத்தில் உள்ள காஞ்சிரம், காஞ்சிப்பட்டி, நந்தனூர், பாப்பாகுடி, சிரமம், செங்குளம், தவசுகுடி மற்றும் வேளாரேந்தல் ஆகிய 8 கண்மாய்களும், இளையான்குடி வட்டத்தில் உள்ள அதிகரை, அரியாண்டிபுரம், ஆழிமதுரை, நெடுங்குளம், பெரும்பாளை, வல்லக்குளம், எமனேஸ்வரம், வழக்கானி மற்றும் உதயனூர் ஆகிய 9 கண்மாய்கள் என மொத்தம் 17 கண்மாய்கள் புணரமைக்கும் பணி 10.52 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. புணரமைக்கும் பணியில், 41.94 கிலோ மீட்டர் நீளம் கரைகள் பலப்படுத்தும் பணி, 67 மடைகள் மறுகட்டுமானப்பணி, 4 கலுங்கு பழுது பார்க்கும் பணி, 1,060 மீட்டர் தொலைவு சிமிண்ட் கலவையிலான வாய்க்கால் அமைக்கும் பணி, 17 நீர்செறிவூட்டிகள் ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் 2,012 ஹெக்டேர் நிலங்கள் முழு பாசன வசதி பெறும். தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் ரூ.75.6 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, நீர்வளத்துறையின் சார்பில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் 26 கண்மாய்கள் 13.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 1641.6 ஹெக்டர் நிலங்கள் நீர்பாசன வசதி பெற்றுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்துப்பகுதிகளில் சரிசமான ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியை பெறவேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி எதிர் கட்சி என்ற வித்தியாசம் பாராமல் திட்டங்களை அனைத்துப்பகுதிகளுக்கும் செயல்படுத்தி வருகிறார்.

தமிழக அரசால் செயல்படுத்தி வரும் சிறப்புமிகு திட்டங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வேளாண்குடி பெருமக்கள் தங்களது ஆதரவை வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil