கீழடியில் தரையிலிருந்து கிளம்பும் தமிழன் நாகரீகம்: தங்கம் தென்னரசு பெருமிதம்
கீழடியில் சிவப்பு நிற பெரும்பானை கண்டுபிடிப்பு.. தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட்டரில் பெருமிதம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாய்வு பணி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நமது முன்னோர்களின் நாகரீகத்துக்கான சான்றுகள் நாள்தோறும் கிடைக்கப் பெற்று வருகிறது. கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் இதுவரை செப்பு காய்கள், பானை ஒடுகள், சுடுமண் உறைகிணறுகள், பாசிகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகளும், பத்து சமதள எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. முதுமக்கள் தாழிகளினுள் கருப்பு, சிவப்பு வண்ண சுடுமண் பாத்திரங்கள், கத்தி போன்ற இரும்பு ஆயுதம் உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டன. அகரத்தில் நத்தை கூடுகள், உறைகிணறு, சிறிய பானைகள், பானை ஓடுகள், தலையலங் காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
மணலூரில் குறிப்பிடத்தக்க பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில்,கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் புதிதாக சிவப்பு வண்ணத்திலான பானை ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில் குகைவிட்டுக் கிளம்பும் புலி. புகைவிட்டுக் கிளம்பும் எரிமலை. உறைவிட்டுக் கிளம்பும் வாள் போல, தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம் என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
பெரும்பானை உள்ள குழியினை முழுமையாக தோன்டிய பின்னரே, பானையின் முழு வடிவமும் பானையின் உள்ளே ஏதேனும் பொருட்கள் உள்ளனவா எனத் தெரியவரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu