மாணவர்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

மாணவர்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
X

காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ் நடைபெற்ற பாராட்டு விழாவில்  பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி 

காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ் பாராட்டு விழா நடைபெற்றது

இளைய தலைமுறையினர்கள், கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ்,போல் திகழ்வதற்கு தங்களது தனித்திறன்களை வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராட்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பேச்சு.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,

காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தற்போது, பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ், சதுரங்கப் போட்டியில் சாதித்து, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் குறிப்பாக நமது சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாக சிறுவயதிலிருந்து சதுரங்க விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று, 2020-ல் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்று, அதில் 2,400 புள்ளிகள் பெற்று, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று பெருமை சேர்த்தார்.

அதனைத்தொடர்ந்து, தற்போதும் ஸ்வீடனில் நடைபெற்ற ரில்டன் கோப்பை சதுரங்கப் போட்டியில் பங்கேற்று 2,500 புள்ளிகள் பெற்று, இந்தியாவின் 79 -வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் 28-வது கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பையும் பெற்று நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இனி, வரும்காலங்களிலும் 2,600 புள்ளிகளை விரைவில் பெற்று, சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ்வதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொணர்வதற்கு அடிப்படையாக இருந்த சதுரங்க கழக அமைப்பாளர்கள் மற்றும் பள்ளிகளை சார்ந்த நிர்வாகிகள், குறிப்பாக, உறுதுணையாக இருந்த இவரின் பெற்றோர் பொருளாதார ரீதியாகவும் சமாளித்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு பிரனேஷ் அனுப்பி வைத்து, அவருக்கான வாய்ப்பினை உருவாக்கி தந்து, உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைய தலைமுறையினர்கள், கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ் போல், திகழ்வதற்கு தங்களது தனித்திறன்களை வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.சதுரங்கப் போட்டியின் தாயகமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்ற விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் , 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை, கடந்த ஜூலை 2022-ல் சென்னை மாமல்லபுரத்தில் நடத்தி பெருமை சேர்த்தார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், தற்போது விளையாட்டுத் துறையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறன்களின் அடிப்படையில், அவர்களை உருவாக்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் பல்வேறு நவீனயுக்திகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை மாணக்கர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஒவ்வொரு பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தங்களது பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களில் படிப்பில் மட்டுமன்றி விளையாட்டு, தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை அடையாளப் படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றுள்ள கிராண்ட் மாஸ்டர் அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு, அவர்கள் வாழ்வில் மென்மேலும் உயர்ந்து பல வெற்றிகளை அடைந்து வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சுவாமிநாதன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை, சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் என்.கருப்பையா, செயலர் எம்.கண்ணன் மற்றும் பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!