சிவகங்கை மாவட்டத்தில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், காட்டாம்பூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று, நலத்திட்டங்களை வழங்கினார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், காட்டாம்பூர் ஊராட்சி, தேவரம்பூர் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில், தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது;
தமிழக அரசின் அனைத்துத்துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும் மற்றும் கால்நடைகளை பேணிக்காத்திடும் பொருட்டும், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், தலா 20 முகாம்கள் என, மாவட்ட அளவில் மொத்தம் 240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு வட்டாரத்திற்கு ரூ.10,000வீதம் மொத்தம் ரூ.24 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம், இன்று காட்டாம்பூர் ஊராட்சி, தேவரம்பூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. குறிப்பாக, மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், செட்டிநாடு பண்ணையில் 1,500 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் கால்நடைப் பண்ணையில் கால்நடை மருத்துவக் கல்லூரி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கிராமப்புறப் பகுதிகளின் மேம்பாட்டில் தமிழக அரசு, தனி கவனம் செலுத்தி அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு, அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவைகளை செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கப்படுகிறது. மேலும், விவசாயிகளின் நிலங்களை உழுவதற்கும் மற்றும் பால் தந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உற்றத்தோழனாக விளங்கி வரும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையில், கால்நடைகளுக்கு தேவையான உணவு உற்பத்திப் பொருட்கள், மருந்தகங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ முகாம்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி, கால்நடைகளை பேணிக்காப்பதற்கான நடவடிக்கைகள், அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பெறும் கடனுதவிகளை உரியகாலத்தில் திரும்பச் செலுத்தி, மீண்டும் அதன் மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமன்றி, மாவட்டத்தில் கடைக்கோடி கிராமங்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையிலும், அனைத்துக் கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்கெனவும் அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் முன்னேற்றப்பாதையில் வழி நடத்தி செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து, அதன்மூலம் தனிநபர் மற்றும் கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
இவ்வாறு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறந்த கிடேரிக்கன்றுகளை வளர்த்த 10 விவசாயிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், 56 விவசாயிகளுக்கு தீவனப்புல் மற்றும் தீவனங்கள், 30 விவசாயிகளுக்கு தாது உப்புக்கள் ஆகியவைகளை ரூ.26,000 மதிப்பீட்டிலும், பால்வளத்துறையின் சார்பில், தேவரம்பூர் கிராமத்தில் புதிதாக மாமரை 1222 தேவரம்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணை மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 18 விவசாயிகளுக்கு ரூ.12.01 லட்சம் மதிப்பீட்டில் என, மொத்தம் 96 விவசாயிகளுக்கு ரூ.12.27 லட்சம் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க கண்காட்சியினை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் (காரைக்குடி) ஸ்ரீமான், துணைப்பதிவாளர், பால்வளம் (மானாமதுரை) செல்வம், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் சதாதேவன், ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா, கால்நடைப் பராமரிப்புத்துறை துணை இயக்குநர் முகமதுகான், கால்நடை மருத்துவர்கள் மற்றும் திருப்பத்தூர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu