சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் பணிகள்.. ஆட்சியர் நேரில் ஆய்வு...
தோட்டக்கலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இதில், வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞசாயத்துகளில் தலா ரூ. 47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சூரிய உலர்த்தி, கடலை மிட்டாய் உற்பத்தி, பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு இயந்திரங்கள் ஆகிய ஆறு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி மேற்கொள்ளப்பட உள்ளன. உற்பத்தி பணியினை அந்த அந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்திடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் இயந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்த ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu