சிவகங்கையில் ஓவியக் கண்காட்சி: ஆட்சியர் தொடக்கம்

சிவகங்கையில் ஓவியக் கண்காட்சி: ஆட்சியர் தொடக்கம்
X

அருங்காட்சியத்துறையின் சார்பில் சிவகங்கை கலைமகள் ஓவியப் பயிற்சி மையம், தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய ஓவியக்கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

நமது முன்னோர்கள் உயிர் தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர்

அருங்காட்சியகத்துறையின் சார்பில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிப்பகுதியில் அருங்காட்சியத்துறையின் சார்பில் ,சிவகங்கை கலைமகள் ஓவியப் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய ஓவியக்கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து தற்பொழுது 75 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடிடும் விதமாக, 75 ஆவது சுதந்திர திருநாள் அமுதபெருவிழா நாடுமுழுவதும் கடந்த ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் உயிர் தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர். அதனடிப்படையில், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, விஞ்ஞானம், விண்வெளி போக்குவரத்து ஆகியவைகளில் வளர்ச்சி பெற்று, நாம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

சிவகங்கை மாவட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு, இன்றைய தினம் 13.08.2022 முதல் 15.08.2022 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றிடும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

75-வது சுதந்திரதிருநாள் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக அருங்காட்சியத்துறையின் சார்பில், சிவகங்கை கலைமகள் ஓவியப் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய ஓவியக் கண்காட்சி இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், நமது சுதந்திரத்தை போற்றிடும் வகையில் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற, குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப்பற்றி எதிர்கால சந்ததியினராகிய இளையதலைமுறையினர் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், இக்கண்காண்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அருங்காட்சியத்துறையின் சார்பில், மகாத்மா காந்தியடிகள் பற்றியும் கண்காட்சி அமைத்து சிறப்பு சேர்க்கப்பட்டது.

இக்கண்காட்சி நமது சுதந்திரப்போராட்டம் குறித்து இடம் பெற்றுள்ள புகைப்படங்களை அனைவரும் பார்த்து, சுதந்திரத்திற்காக தனது இன்னுயிர் நீத்த தியாகிகள் குறித்து அறிந்து கொண்டும், 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழாவில், தங்களது பங்களிப்பை ஏற்படுத்திடும் விதமாக தேசியக்கொடியினை வீடுதோறும் ஏற்றி, நாம் அனைவரும் இந்திய குடிமகன் என்பதில், பெருமை கொள்வோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சிவகங்கை நகராட்சிப்பகுதியிலுள்ள பாரதி பூங்காவில் இந்திய தேசியக்கொடியினை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ணம் பூசப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர், பார்வையிட்டு, தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.முன்னதாக, சிவகங்கை நகராட்சிப்பகுதியிலுள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளி அருகில் பொதுமக்களின் வீடுகளில், தேசியக்கொடி ஏற்றப்படும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுமக்களுடன் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை நகர் மன்றத்தலைவர் சி.எம். துரைஆனந்த், சிவகங்கை நகராட்சி ஆணையர் வி.பாஸ்கரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, கலைமகள் ஓவிய பயிற்சி மைய நிறுவனர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், பாக்கியலெட்சுமி விஜயகுமார், கீதாகார்த்திகேயன், இராஜேஸ்வரி ராமதாஸ், சரவணன், மாநில ஓவிய சங்க தலைவர் ரெகுபதி, பொதுசெயலாளர் துரைஜோதி, ரெட்கிராஸ் சங்க மாவட்டத்தலைவர் பகீரத நாச்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!