சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
இளையான்குடி பேரூராட்சி, சாலைகிராமம் பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளை சந்தித்த கலெக்டர் ஆஷா அஜித், குறைகளை கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இளையான்குடி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்குட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார். மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் நடந்து வரும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் நடந்த தாய்மார்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாமில், கலெக்டர் பங்கேற்றார்.
அப்போது, கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது,
மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் முதற்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை 12 நாட்கள் மொத்தம் 695 முகாம்கள் ஊரக பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. அதனை த்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 16.08.2023 வரை 12 நாட்கள் நகர்ப்புறப் பகுதிகளான நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மொத்தம் 134 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இன்று முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் பணிகள் குறித்து, இன்று இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் நடக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாம்களில், குடும்பத்தலைவிகளுக்கு எவ்வித சிரமுமின்றி, விண்ணப்பங்களை எளிய முறையில் வழங்கவும், முகாம்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தருவதற்கும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
தொடர்ந்து, சாலை கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாநிலங்களவை உறுப்பினர் (ப. சிதம்பரம் ) நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தற்போது இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், ஸ்கேன் அறை பெண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு அறை, படுக்கை வசதிகள், மருந்து இருப்புகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளின் வருகை பதிவேடு சித்த மருத்துவபிரிவு மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சாலை கிராமம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் முறை , குழந்தைகளின் எடை மற்றும் உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையலறை, கழிப்பறை ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , ஒன்றிய பொது நிதி 2022-23-ன் கீழ் ரூ.5.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை கட்டுமானப்பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், இளையான்குடி பேரூராட்சி பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தாய்மார்களுக்கு பயனுள்ள வகையில் சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக தாய்மார்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் மாவட்டம் முழுவதும் நடத்திடும் பொருட்டு, 7 வட்டாரங்களில் நடத்தப்பட்டு, 8-வது நிகழ்ச்சியாக இப்பகுதியில் சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.
இம்முகாமில், கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது,
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் தேவைகள், பற்றாக்குறைகள் மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்கள் தங்களது உடல் நலத்தினை பேணிக்காப்பது மிக அவசியமான ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு இளம் வயது திருமணத்ததை ஒழித்தல், இளம் வயது கர்ப்பத்தினை தவிர்த்தல், தேவையற்ற கர்ப்பங்களை தடுத்தல், ஆரோக்கியமான பிறப்பு இடைவெளியினை உருவாக்குதல், சிறு குடும்ப நெறியினை பாதுகாத்தல் போன்றவைகளில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும்.
தங்களது கணவரிடமும் இது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துறை ரீதியாக நடத்தப்படும் இம்முகாமின் வாயிலாக, ‘நோய்கள் வரும் முன் காப்போம்’ என்ற அடிப்படையில் மருத்துவ ரீதியாக தங்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவ அலுவலர்கள் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.
இது தவிர தங்களது இல்லங்களுக்கே மருத்துவ அலுவலர்கள் நேரடியாக வருகைப் புரிந்து, குடும்ப கட்டுப்பாடு மட்டுமன்றி , உடல் நலத்தினை பேணிக் காக்க ஏதுவாக, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ ரீதியான ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின் போது, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) பெருமாள்சாமி இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முனியாண்டி, இளையான்குடி பேரூராட்சித் தலைவர் நஜீமுதீன், இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத், இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu