சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு

சிவகங்கை மாவட்டம்  கீழடியில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
X

கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பகக் கட்டிடம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், வரலாற்று சிறப்பு அம்சங்களை வெளிக்கொணரச் செய்யும் வகையிலும், சங்ககாலத்தில் வாழ்ந்து வந்த தமிழர்கள், நாகரிகத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதையும், குறிப்பாக எழுத்தறிவு மிக்கவர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதையும், இளைய தலைமுறையினர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உலகளவில் தமிழின் புகழை பறைசாற்றி, பெருமை சேர்த்து வருகிறார்கள்.

தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்கள் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வரும் நமது சிவகங்கை மாவட்டத்தில் நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் மற்றும் இளைய, எதிர்கால சந்ததியினர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப் பணிகள் 8 கட்டமாக கீழடிப் பகுதியில் நடைபெற்றது.

மேற்கண்ட பணிகளின் போது கிடைக்கப் பெற்ற, நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதன் பெருமையை உலகளவில் பறைசாற்றுகின்ற வகையிலும், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பகக் கட்டிடம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது சிறப்பாக நிறைவுற்று, தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த அருங்காட்சியகம் உலகளவில் புகழ் பெறுகின்ற வகையிலும், பண்டைய தமிழர்களின் புகழினை, பறைசாற்றுகின்ற வகையிலும், உலக நாடுகள் வியக்கின்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தமிழகத்தின் வரலாற்று பக்கங்களில் சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 05.03.2023; ஞாயிற்றுக்கிழமை அன்று நேரடியாக இங்கு வருகை புரிந்து, திறந்து வைத்து சிறப்பு சேர்க்கவுளார்கள்.

கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் நிறைவுப் பணிகள் தொடர்பாக இன்றையதினம் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் , தமிழ்நாடு முதலமைச்சர், நேரடியாக இங்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர்மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!