கீழடி அகழாய்வு அருங்காட்சியக கட்டிடப் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்று வரும் அருங்காட்சியக கட்டிடப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற மார்ச் - 2023, முதல் வாரத்தில் கீழடி அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஆட்சியர் கூறியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத் தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கீழடி அகழாய்வுப் பணியில், கிடைக்கப் பெறும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பகக் கட்டிடம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இந்த அகழாய்வுப் பணிகளின் போது கிடைக்கப் பெற்ற தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நமது சங்ககாலத் தமிழர்களின் பெருமைகளை பறைச் சாற்றுகின்ற வகையில் உலகளவில் புகழ் பெறவுள்ள கீழடி அகழ் வைப்பகக் கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அவ்வளாகத்தில் நடைபெற்று பணிகள் ஆகியவைகள் தொடர்பாக, இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வருகின்ற ‘மார்ச்-2023’ முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் , தென் மண்டல மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சமயம், கீழடி அருங்காட்சியகத்தினையும் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம், (சென்னை) செயற்பொறியாளர் மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.இரா.சிவராமன், சிவகங்கை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu