கீழடி அகழாய்வு வைப்பக கட்டிடப்பணி: அரசு செயலர் ஆய்வு

கீழடி அகழாய்வு வைப்பக கட்டிடப்பணி: அரசு செயலர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் கீழடி அகழ் வைப்பக கட்டிடப்பணிகளை ஆய்வு செய்த சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு செயலர் பி. சந்திரமோகன். உடன் ஆட்சியர் மதுசூதனரெட்டி

கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகளw சுற்றுலா, பண்பாடு சமய அறநிலையத்துறை, அரசு செயலாளர் பி.சந்திரமோகன் ஆய்வு செய்தார்

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன. இந்த தொல் பொருள்களை பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்கும் வகையில் அகழ் வைப்பகம் இங்கு அமைக்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகள் தொடர்பாக,சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை, அரசு முதன்மைச் செயலாளர் மரு.பி.சந்திரமோகன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அகழாய்வுப் பணியில் கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டிநாடு கலைநயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் மட்டும் தற்போது நிறைவடைந்துள்ளது.

மேலும், அகழாய்வின் போது கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பணிகள் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட திட்டமிடப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம், (சென்னை) செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!