சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உணவு தயாரிப்பு பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல் கூட்டம்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உணவு தயாரிப்பு பாதுகாப்பு குறித்த  வழிகாட்டுதல் கூட்டம்
X

உணவு தயாரிப்புக்களில் பாதுகாப்பு சட்டம் மற்றும் தர நிர்ணய விதிகளை நடைமுறைப் படுத்துவது குறித்து, மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக்கூட்டம் நடைபெற்றது.

Guidance meeting on food preparation safety at Sivangangai

உணவு தயாரிப்புக்களில் பாதுகாப்பு சட்டம் மற்றும் தர நிர்ணய விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக்கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உணவு தயாரிப்புக்களில் பாதுகாப்பு சட்டம் மற்றும் தர நிர்ணய விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மணிவண்ணன், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் எஸ்.பிரபாவதி, அரசு அலுவலர்கள், வணி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உணவுப்பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் பற்றி விளக்கமளித்தார்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர்( பொ) ப. மணிவண்ணன் கூறியதாவது:அரசு சார்ந்து இயங்கும் உணவகங்கள் மற்றும் விடுதிகளை உணவுப்பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற்றிட வேண்டும். உணவினால், ஏற்படும் தொற்று நோய்கள், ஒவ்வாமை போன்றவைகள் குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் அளித்து ஆய்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விடுதிகளில், சமைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் மாதிரிகளை எடுத்து வைக்க வேண்டும். சமைக்கும் பணியாளர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளித்திட வேண்டும்.

வணிக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், உணவுப்பொட்டலங்கள் மீது அதன் பெயர், சேர்மானங்கள் குறித்த விபரம், ஊட்டச்சத்துக்களின் விபரம், சைவ மற்றும் அசைவ உணவுகளின் குறியீடுகள், சேர்க்கப்பட்டுள்ள செயற்கை நிறங்கள், வாசனையூட்டிகளின் விபரம், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழு முகவரி, எடை, தயாரிப்பு தேதி, பயன்படுத்த உகந்த தேதி போன்ற விபரங்கள் இடம் பெற செய்திட வேண்டும். தயாரிப்பாளர்கள் மற்றும் மறு விற்பனை செய்பவர்கள் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு உணவுப்

பண்டங்கள் குறித்த விழிபபுணர்வினை சிறப்பு முகாம்கள் நடத்தி ஏற்படுத்திட வேண்டும், அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், பால், எண்ணெய் மற்றும் ரொட்டி போன்ற வகைகளில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்,

தனியார் விழாக்கள், மற்றும் அன்னதானக் கூடங்களில் உணவுகள் வீணாகுவதை தவிர்த்திட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம் பிறவகை பயன்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருட்களை தங்களது வணிக நிறுவனங்களில் விற்பனை செய்வதை தவிர்த்திட வேண்டும்,

உணவுப்பொட்டலங்களில், ஏற்கெனவே, லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தால், அதன் மீது புதிய லேபிள்கள் ஒட்டுவதை தவிர்த்திட வேண்டும். விழாக்காலங்களின் போது தற்காலிமாக அமைக்கப்படும் கடைகள் அரசின் விதிமுறைகளை அறிந்து தங்களது வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டத்தின் கீழ் பதிவு செய்திட வேண்டும். தரமான உணவுப்பொருட்கள் தயாரிப்பதையும் மற்றும் எண்ணெய் வகைகளை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்திட வேண்டும். உணவகங்களில் பூச்சிகள், ஈக்கள் போன்றவை புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் விதிமுறைகளை பின்பற்றாத உணவு வணிக நிறுவனங்கள் மீது தர நிர்ணயம் சட்டம் 2006-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் அரசின் விதிமுறை பின்பற்றி பொதுமக்களுக்கு சுத்தமான சுகாதாரமான ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் கிடைத்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மணிவண்ணன், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் எம்.சரவணக்குமார், ஆர்.தியாகராஜன், எஸ்.வேல்முருகன், ஏ.ஐ.முத்துக்குமார், வி.ராஜேஸ்குமார், அனைத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story