பெரியார் சமத்துவபுர சீரமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி: அமைச்சர் உதயநிதி

பெரியார் சமத்துவபுர  சீரமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி: அமைச்சர் உதயநிதி
X

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டியில்  வசித்து வரும் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பெரியார் சமத்துவ புரம் வீடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆய்வு செய்தார்

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி கிராமத்திலுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரப்பேட்டை ஊராட்சி, சிறுகூடல்பட்டி கிராமத்தில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் வசித்து வரும் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி பேசியதாவது:

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் ஏழை, எளியோர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் அத்திட்டங்களை பின்பற்றுகின்ற வகையில், சிறப்பாக நிர்வாகத்தை தமிழகத்தில் மேற்கொண்டார்கள். அதில், குறிப்பாக தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக, அனைத்துத்தரப்பினரும் ஏற்றத்தாழ்வின்றி சமமான முறையில் வசித்திடும் பொருட்டும், முன்மாதிரியான கிராமத்தினை உருவாக்கிட வழிவகை ஏற்படுத்திடும் பொருட்டும், வீடு இல்லாதவர்களுக்கும் கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், சாதிமத பேதமின்றி, அமைதிப் பூங்காவாக உருவெடுக்கும் நோக்கிலும், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக, தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம் திகழ்ந்தது.

தந்தை பெரியார், நினைவு தினமான இன்று, வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் சமத்துவபுரம் பகுதியில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் , தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்தினை ஏற்படுத்தினார்கள். அவ்வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் , ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்திற்கு தற்போது புத்துயிர் ஊட்டியுள்ளார்கள்.

கடந்த காலங்களில் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாத வீடுகளை, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள். அதன்படி, இன்றையதினம் அப்பயனாளிகள் 100 நபர்களுக்கு தலா ரூ.1.52 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப்பட்டாக்களை நான் வழங்கியுள்ளேன்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மொத்தம் 7 சமத்துவபுரங்களை ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை கடந்த 08.06.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைத்துள்ளார்கள்.

குமாரப்பேட்டை ஊராட்சி, தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, இப்பகுதியில் வசித்து வரும் ஒரு குழந்தை இப்பகுதிக்கு பூங்கா வேண்டுமென என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இப்பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். இதுமட்டுமன்றி, இப்பகுதிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே மேம்படுத்தப்படும். மேலும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளை நேரில் சந்தித்து, திட்டத்தின் பயன்கள் குறித்து, நேரில் கேட்டறிந்தேன்.

இதுபோன்று பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. திட்டங்களின் பயன்களைப் பெறும் பயனாளிகள் அதனை உரியமுறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர்களுக்கான கட்டப்பட்டு வரும் 90 வீடுகள் தொடர்பான கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை ஒப்படைப்பு செய்வதற்கென பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தசோ.சண்முகவடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story