இளையான்குடி பேரூராட்சியில் வேளாண் விரிவாக்க மையத்துக்கு அடிக்கல்
இளையான்குடி பேரூராட்சி பகுதியில், ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி பகுதியில் , வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சப் பெரியகருப்பன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , வேளாண் பெருங்குடி மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்.
இளையான்குடி பேரூராட்சி பகுதியில் தற்போது, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மை துறையின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்து தற்காலிக இடத்தில் செயல்பட்டு வந்தது. இதற்கு நிரந்தர கட்டிடம் வேண்டுமென்று இப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இம்மையத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் இம்மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெறுவதை தடுக்கின்ற பொருட்டு, அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு பயனுள்ள வகையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்வதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கான செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன் பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) ஆர்.தனபாலன், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) ஜி.அழகுமலை, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் எம்.செல்வம், உதவி பொறியாளர் எம்.இந்திரா, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்றத் தலைவர் மாரியப்பன்கென்னடி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி சாந்தாராணி, இளையான்குடி பேரூராட்சித்தலைவர் கே.ஏ.செய்யதுஜமீமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu