கொப்பரைத் தேங்காய்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விற்பனை செய்யலாம்

கொப்பரைத் தேங்காய்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விற்பனை செய்யலாம்
X

பைல் படம்

தென்னை விவசாயிகள் சாகுபடி செய்த தோங்காய் கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உரிய ஆவணங்களுடன் விற்று பயனடையலாம்

விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து கொப்பரை தேங்காயினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று விற்று பயனடையலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில், தற்போது, தேங்காய் கொப்பரைகளின் விலையின் ஏற்றத்தாழ்வின் காரணமாக, தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நேரடியாக 2022-ம் ஆண்டுக்கான தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சுமார் 400 மெ.டன் வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கான விலை அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 எனவும், பந்துக்கொப்பரைக்கு ரூ.110.00 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தர நிர்ணயம் அரவை கொப்பரையின், ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிகபட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.

பந்துக் கொப்பரையின் ஈரப்பதம் அதிகப்பட்சம் 7 சதவீதம் இருக்கலாம், சுற்றளவு குறைந்தபட்சம் 75 மி.மீ இருக்க வேண்டும். அயல் பொருட்கள் 0.2 சதவீதம், பூஞ்சாணம், கருமை நிறம் கொண்ட கொப்பரை ஆகியவை அதிகப்பட்சம் 2 சதவீதம் மட்டுமே இருக்கலாம். சுருக்கம் கொண்ட கொப்பரை அதிகபட்சம் 10 சதவீதம், சில்லுகள் அதிக பட்சம் 1 சதவீதம் இருக்கலாம்.

விவசாயிகள் முதலில் தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விபர நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து தங்களது கொப்பரையினை ஒப்படைக்கலாம். அலுவலர்களால் தர ஆய்வு செய்து ,தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆகவே, சிவகங்கை மாவட்ட தென்னை சாகுபடி செய்து கொப்பரை தேங்காய் உற்பத்தி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையினை திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று விற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.இது குறித்து, மேலும் தகவல்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள அலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.

மேலாளர் - 97862 69851.

சிங்கம்புணரி - 82482 59492, 99449 29936.

திருப்புவனம் - 95666 55382, 90871 75759 மற்றும் 63825 06642.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!