சிறுதானிய உற்பத்தி ஆண்டு விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
சிறுதானிய ஆண்டு போட்டிகளை துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி கலையரங்கத்தில், சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023-யொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கூறியதாவது:
தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் இயல்பாக 8.66 இலட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 31.28 இலட்சம் மெ.டன் உற்பத்தி செய்யப்படுகின்றன. சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகிய சிறுதானியல்களின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க, 2018-2019-ஆம் ஆண்டு முதல் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து தானியங்கள் எனும் திட்டம் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, திண்டுக்கல். தூத்துக்குடி, ஈரோடு, கரூர், மதுரை, நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சிறுதானியப் பயிர்களின் பரப்பினை அதிகரித்து, அதிக உற்பத்தியை எய்த அதிக அளவு வாய்ப்புகள் உள்ளதால் ஒரு இயக்கம் செயல்படுத்துவது அவசியமாகிறது.
சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியர்கள் கோரிக்கை ஏற்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 2023-ஆம் ஆண்டினை 'சர்வதேச சிறுதானிய ஆண்டாக" அறிவித்துள்ளது. சிறுதானிய உற்பத்தி மற்றும் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒரு பிரத்யோக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுதானிய ஆய்டிற்கான மையப் பயிராக தமிழ்நாட்டில் கேழ்வரகு தேர்வு செய்யப்பட்டது. 'இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்" திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டு ஒரு சிறுதானிய மண்டலம் மற்றும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி. இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டு மற்றொரு சிறுதானிய மண்டலம் அமைக்கப்படும்.
நெல் மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில், சிறுதானியங்கள் இரும்பு. கால்சியம் போன்ற அதிக அளவு தாது சத்துக்கள் உடையவை, தினையில் அதிக அளவு கந்தகச் சத்தும் அமினோ அமிலங்களும் உள்ளன. சிறுதானியங்களில் அதிகளவு நார்ச் சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் சத்துமாவு உருண்டைகளை வழங்குவது வரப்பிரசாதமாக அமைகின்றன.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயம் தொடர்பான நோய்களுக்குத் தீர்வாக சிறுதானியங்கள் உணவே அருமருந்தாக அமைகிறது. சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக தயார் செய்வதற்கான வாய்ப்புகள் சிறுதானியங்களை மாவாக திரிக்கவும், பாரம்பரிய முறையில் கூழ், கஞ்சி, களி, அடைதோசை மற்றும் உப்புமா செய்ய சிறுதானியங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. புட்டு, சேமியா, பொங்கல், ஊட்டச்சத்துக்கலவை, முறுக்கு, தட்டை, ஓமப்பொடி, அல்வா, ஊட்டச்சத்து, பானம் போன்ற பலகாரங்களை செய்ய சிறுதானியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கண்ட காரணங்களால் சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட விவசாய தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில், மாநில அரசுத் திட்டங்கள் வகுத்திட முனைப்பு காட்டி வருகிறது. எனவே, விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிட்டு, உணவாகவும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி, கையெழுத்துப் போட்டி, வண்ணக் கோலமிடுதல், மெஹந்தி, ஸ்லோகன் எழுதுதல் போன்ற வெற்றி பெற்ற கல்லூரி மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியைகளுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபால், மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரித் தலைவர் அண்ணாமலை, தாளாளர் அசோக், கல்லூரி முதல்வர் மரு.ராஜராஜேஸ்வரி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu