கல்வி உதவித் தொகை பெற ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
பைல் படம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2022-2023-ஆம் கல்வியாண்டில், பயின்று வரும் ஆதிதிராவிடர் - பழங்குடியினர்மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இன மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வேண்டி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை முற்றிலும் இணைய வழி மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டு, இக்கல்வியாண்டு முதல் மாணாக்கர்களே மேற்கண்ட இணையதளத்தில் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்க ஏதுவாக, புதிய இணையதளம் கடந்த 31.01.2023 அன்று முதல் திறக்கப்பட்டு மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2022-2023-ஆம் கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 71 கல்லூரிகளில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்த சுமார் 4,633 பழைய மாணவ, மாணவர்களும் 2,326 புதிய மாணவ, மாணவியர்களும் மேலும், கூடுதலாக 6,959 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றார்கள். இம்மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான விண்ணப்பிக்கும் முறை பற்றிய செய்முறை வீடியோ, சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திலிருந்து இம் மாவட்டத்திலுள்ள மேற்கண்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கண்ட விண்ணப்பிக்கும் முறை, பற்றிய செய்முறை வீடியோ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்மாணவர்கள் கல்வி நிறுவனம் மூலம் மட்டுமன்றி, தங்களது இணையதள வசதியுள்ள அலைபேசி மூலமும் அல்லது தனியார் பிரவுசிங் சென்டர்களிலும் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இன மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வேண்டி இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் புதிது என்பதாலும், விண்ணப்பிக்க மிகக் குறுகியகாலமே உள்ளதாலும், மேற்கண்ட மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி கல்வி உதவித் தொகை மாணாக்கர்களின் வங்கிக்கணக்கிற்கு விரைவில் சென்றடையும் பொருட்டு, அவர்களை விரைந்து விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குச்சென்று மாணாக்கர்களை சந்தித்து அவர்கள் விண்ணப்பிக்கும் முறை பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்களுக்கு எடுத்துக் கூறி உடனடியாக விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொறுப்பாளர்களாக ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக்காப்பாளர்களுக்கும், இவர்களின் பணி முன்னேற்றம் தொடர்பாக கண்காணித்திட சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட தனி வட்டாட்சியர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட மேற்கண்ட விடுதிக் காப்பாளர்- காப்பாளினிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு 09.02.2023 அன்று முதல் காலை 10 மணிக்கு நேரில் சென்று, கல்வி நிறுவன பதிவாளர்கள் மற்றும் முதல்வர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து அக்கல்வி நிறுவனங்களின் நோடல் அலுவலர்களுடன் இணைந்து அந்த கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஆதிதிராவிடர் -பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இன மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வேண்டி இணையவழியில் விண்ணப்பிக்க ஏதுவாக அக்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆய்வுக்கூடங்கள் அல்லது கணிணி அறைகளை ஒதுக்கி சிறப்பு ஏற்பாடு செய்து கல்வி நிறுவனம் மூலம் ஒருவார காலத்திற்குள் அனைத்து மாணாக்கர்களும் விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, 2022-2023-ஆம் கல்வியாண்டில் இம்மாவட்டத்தில் பயின்று வரும் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இன மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வேண்டி இணையவழியில் விண்ணப்பிக்க உள்ள இந்நிலையில் கல்லூரியில் பயின்று வரும் மாணாக்கர்களில் புதிய மற்றும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் அனைவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் , கல்வி உதவித்தொகை இணையதள முகவரியில் இணையவழியில் விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்களுடன் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி விண்ணப்பித்து மாணவ, மாணவியர்கள் அனைவரும் பயன்பெறலாம்.
ஆதார் எண், தொலைபேசி எண். (கட்டாயம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.), 2018ஆம் ஆண்முதல் இணையதளத்தில் விண்ணப்பித்து பெறப்பட்ட சாதிச்சான்று மற்றும் வருமானச்சான்று, 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், கல்லூரிச் சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.
மாணவர் பெயர் (பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ளபடி), மாணவர் பெயர் (ஆதார் அட்டையில் உள்ளபடி), பிறந்த தேதி, பாலினம், சாதி, மதம், தந்தை பெயர் மற்றும் தந்தை தொழில், தாயார் பெயர் மற்றும் தாயாரின் தொழில், இயலாமைச் சான்று , நிரந்தர முகவரி மற்றும் இருப்பிட முகவரி விவரம் போன்ற மாணவர்களின் சுயவிவரங்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu