சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு
பைல் படம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு, பண்ணைச்சாரா தொழிற் கடனுதவி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனுதவியும் என மொத்தம் 520 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்திற்குட்பட்ட கீழடி, செல்லப்பனேந்தல் மற்றும் மடப்புரம் ஆகிய ஊராட்சி களில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வாழ்கின்ற இளைஞர்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்திடும் பொருட்டும், படித்த வேலைநாடும் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி அளித்திடும் பொருட்டும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு பயன்பெற செய்து வருகிறது.
மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்காக தொலைநோக்குப் பார்வையுடன் துவங்கப்பட்ட திட்டமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம், தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும் உள்ளது. மேலும், சமூகத்தில் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகளை வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் வங்கிக்கடன் இணைப்புகளுடன் சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி, ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்; சார்பில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களில்; மொத்தம் 9,746 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. அதில், மொத்தம் 1,08,000 உறுப்பினர்கள் உள்ளனர். இச்சுயஉதவிக்குழுக் களுக்கு 2022-2023-ஆம் நிதியாண்டில் சமுதாய முதலீட்டு நிதியாக 1,110 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.16.65 கோடியும் மற்றும் ஆதார நிதியாக 532 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ79.80 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்புவனம் வட்டாரத்திற்குட்பட்ட கீழடி, செல்லப்பனேந்தல் மற்றும் மடப்புரம் ஆகிய ஊராட்சிகளில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுடன் தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்றவாறு உரிய திட்டமிடல் மேற்கொண்டு, தொழில் மேம்பாடு குறித்தும், அரசின் பிற துறைகளின் மூலம் வழங்கப்படும், மானியத் திட்டங்களை தெளிவாகவும், முழுமையாகவும் அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன் பெறுவது குறித்தும், விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தங்களின் பயன்கள் குறித்து இங்கு எடுத்துரைத்துள்ளனர். தாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் தொழிலை விரிவாக்கம் செய்து, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வணிக வள மையத்தின் சார்பில், லாடனேந்தல், பழையனூர், திருப்பாச்சேத்தி, கணக்கன்குடி, முக்குடி, மடப்புரம், பூவந்தி உட்பட பல்வேறு ஊராட்சிகளைச் சார்ந்த 56 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.25.10 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைச்சாரா தொழிற் கடனுதவியும் மற்றும் பெத்த னேந்தல், மேலராங்கியம், செல்லப்பனேந்தல், கீழடி ஆகிய 04 ஊராட்சிகளை சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு தலா ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனுதவியும் என மொத்தம் 520 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் க.வானதி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu