சிவகங்கை அருகே அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்த கால்நடை மருத்துவ முகாம்
சிவகங்கை அருகே கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், “கலைஞரின் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், வேதியரேந்தல் கிராமத்தில், கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை , ஆவின் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை ஆகியத் துறைகளின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தலைமையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கலைஞர் கருணாநிதி வழியில், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசின் அனைத்து அரசுத்துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, விவசாயப் பெருங்குடி மக்களின் உற்றத்தோழனாக விளங்கி வரும் கால்நடைகள் தொழில்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் அன்றாடக் குடும்பச் செலவிற்கும் உதவிகரமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட கால்நடைகளை பேணிக்காப்பதற்கென திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு பிற மாநிலங்களுக்கும் அவை முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக பால்வளத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் 100 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மூன்று இடங்களில் மாபெரும் கல்நடை மருத்துவ முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கீழப்பசலை ஊராட்சிக்குட்பட்ட வேதியரேந்தல் கிராமத்தில் இன்றையதினம் மாபெரும் கல்நடை மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, 12.07.2023 அன்று திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயல்சேரி கிராமத்திலும் மற்றும் 27.07.2023 அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்லாம்பட்டி கிராமத்திலும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இம்முகாமில், கால்நடைகளுக்கான குடற்புழு நீக்கம் செய்தல் , ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், செயற்றை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் கால்நடைகளுக்கு மேற் கொள்ளப்படவுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு விவசாயப் பெருமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாமினை, பயன்படுத்திக் கொண்டு, தங்களின் கால்நடைகளை முறையாக பேணிக்காத்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் சிறந்த கிடேரிக்கன்றுகளை வளர்த்த 3 விவசாயிகளுக்கு பரிசுப்பொருட்களையும் 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மைக்கான பரிசுகளையும் மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக் கடனுதவி, கறவைமாட்டு கடனுதவி, ஆட்டுக்கடனுதவி, கிசான் கடன் திட்டத்தின் கீழ் 64 பயனாளிகளுக்கு கடனுதவிகள் என, மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.02.18 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க கண்காட்சி மற்றும் கால்நடைக்கான முகாமினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் முத்துச்சாமி கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜூனு கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) மரு.கார்த்திகேயன், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் பாலசந்திரன், துணைப்பதிவாளர் பால்வளம் (மானாமதுரை) இரா.செல்வம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.ராதா, கால்நடைப் பராமரிப்புத்துறை துணை இயக்குநர் எஸ்.முகமதுகான், மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மற்றும் கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu