விடுதி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

விடுதி  மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
X

சிவகங்கையில்  வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், விடுதிகளில் தங்கி பயிலும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான ”வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி”மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்தலைமையில் நடைபெற்றது:

சிவகங்கை மாவட்டம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றம் தொழில் நெறி வழிகாட்டி மையம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், விடுதிகளில் தங்கி பயிலும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், குறிப்பாக எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக திகழவுள்ள இன்றைய மாணாக்கர்கள் தரமான கல்வியினை கற்பதற்கான பல்வேறு சிறப்பு திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய பல்வேறு வழிகாட்டுதல்களும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல 23 பள்ளி விடுதிகளில் கல்வி பயிலும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த 135 மாணவ, மாணவியர்களும், 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த 92 மாணவ, மாணவியர்களும் மற்றும் 4 கல்லூரி விடுதிகளைச் சேர்ந்த 86 மாணவ, மாணவியர்களும் என, 313 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

10ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அடுத்து என்ன தேர்வு செய்து கல்வி கற்கலாம் என்பதனை குழப்பம் இல்லாமல் தங்களுக்கு விருப்பமான தங்களது இலட்சியங்களை நிறைவேற்றும் வகையிலான பாடப்பிரிவுகளை தேர்வு செய்திட வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் உள்ள எதிர்கால வாய்ப்புகள் சூழ்நிலைகள் குறித்து அறிந்து தெளிவு பெறவேண்டும்.

படிக்கும் போது பாடப் பிரிவுகளில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் தெளிவு பெற்று, பிறரைச் சார்ந்திருக்காமல் தன்னால் முடியும் என்ற நிலையினை பெறவேண்டும். கல்வி மட்டுமல்லாமல் சுயதொழில் மற்றும் பிற வாய்ப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளன. அரசுப்பணி மட்டுமல்லாமல் அதைவிட உயர்ந்த பதவிகளும் உள்ளது. அதற்கு அடிப்படையான கல்வியினை தொடர வேண்டும். தேர்வின் போதுஇ தாங்கள் எழுத விரும்பும் கூற விரும்பும் கருத்துக்களை மிகைப்படுத்தாமல் சரியான அளவில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதிட வேண்டும்.

தங்களது இலக்குகள் எதுவாக இருந்தாலும் அதனை விடாமுயற்சியுடன் கடின உழைப்பின் மூலம் எய்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுஇ சிறு தடங்கல்கள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல், தாங்கள் விரும்பிய இலட்சியங்களை நோக்கி பயணிக்க வேண்டும். பள்ளி பாடப் புத்தகங்கள் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான புத்தகங்கள் வாசிக்கும் திறனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் மனதினை புத்துணர்வுவோடு வைக்கும் பட்சத்தில், கல்வி கற்பது மிகவும் எளிமையானதாக அமையும். கணினி பயற்சி என்பது மிகவும் அவசியமானதாகும். இதன் மூலம் உலகளாவிய வாய்ப்புக்கள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள முடியும். பள்ளி மற்றும் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கான உயர்கல்வி மற்றும் போட்டித்

தேர்வுகளுக்கான வாய்ப்புகளை நன்கு அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதற்கான கருத்துரைகள் இங்கு திறன் மிக்கவர்களை கொண்டு எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சி.ஜெயமணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.பாலமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ரா.மணிகணேஷ், பா.ராஜலெட்சுமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் டி.கண்ணன், அரசு மகளிர் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர் ர.ஹேமமாலினி, பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....