வாழ்ந்து காட்டுவோம் திட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட புலிக்குளம் மாட்டு இன ஆராய்ச்சி நிலையத்தில் ஆட்சியர் ப. மதுசூதனரெட்டி
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணை பள்ளி பயிற்றுனர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கென பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சிகள் அளித்து அவர்கள் வாழ்வில் வளம் பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், அந்தந்தப்பகுதிகளில் சமுதாய பள்ளிகள் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பயன்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஜல்லிக்கட்டிற்கு பெருமை சேர்த்து வரும் புலிக்குளம் மாட்டு இன வகைகள் நிறைந்த ஆராய்ச்சி நிலையத்தில், கறவைமாடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு, இப்பயிற்சியில்,படிப்பு மற்றும் அனுபவம் ரீதியாகவும், கறவைமாடுகள் வளர்ப்புகள் குறித்து நவீன தொழில் நுட்பங்களுடன் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்கம் மூலம் காளையார்கோவில், மானாமதுரை வட்டாரங்களை சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களான 60 சமுதாய பண்ணை பள்ளி பயிற்றுநர்களுக்கு, புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்து ஒருமாத கால சுய வேலைவாய்ப்பு பயற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்றுநர் உபகரண பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில்,கறவை மாட்டினங்கள் மற்றும் தேர்வு முறைகள, கறவை மாடுகளுக்கான கொட்டகை அமைத்தல், தீவனம் அளிக்கும் முறை, தீவனப்பயிர்கள் சாகுபடி இனப்பெருக்க பராமரிப்பு முறைகள், கன்றுகள் பராமரிப்பு, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் நோய் தடுப்பு முறைகள், சுகாதாரமான பால் உற்பத்தி, கறவை மாட்டு பண்ணை பொருளாதாரம், கறவை மாடுகளுக்கான காப்பீட்டு திட்டங்கள் போன்றவைகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, சமுதாயப் பள்ளிகளுக்கு பயிற்றுநர்களாக திகழவுள்ள நீங்கள் தங்களது பகுதிகளில் தாங்கள் பெற்றுள்ள பயிற்சிகள் குறித்தும், கால்நடை வளர்ப்பின் பயன்கள் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். புதிய கால்நடைகள் வாங்கிட மானியத்துடன் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், பொதுமக்களிடையே எடுத்துரைத்து அதன் மூலம் பயன்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, வெற்றிகரமாக முடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு,வாழ்வில் மென்மேலும் உயருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில், மாடுகள் வளர்ப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சியில், கால்நடைப்பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.நாகநாதன், தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி இயக்கக இயக்குனர் முனைவர் அனில்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu