சிவகங்கை மாவட்டத்தில் நலவாழ்வு மையம்: காணொலி மூலம் முதலமைச்சர் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில்  நலவாழ்வு மையம்: காணொலி மூலம் முதலமைச்சர் திறப்பு
X

 காரைக்குடி நகராட்சிப் பகுதியிலுள்ள கழனிவாசலில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில், எம்எல்ஏ மாங்குடி முன்னிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் குத்துவிளக்கேற்றி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர், காணொலிக்காட்சியின் வாயிலாக, காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்ததார். இதைத்த் தொடர்ந்து, காரைக்குடி நகராட்சிப் பகுதியிலுள்ள கழனிவாசலில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர், சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், காணொளிக்காட்சி வாயிலாக, காரைக்குடி நகராட்சிப் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை, திறந்து வைத்ததார். இதைத்தொடர்ந்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட செல்லஞ்செட்டி ஊரணி, கழனிவாசல் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, உயிர்காக்கும் மருத்துவ சேவையினை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் நலன்காத்து வருகிறார்கள்.

அதில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 போன்ற மகத்தான திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

துணை சுகாதார நிலையங்களில் போன்றவைகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வசதிக்கேற்ப பல்வேறு பிரிவுகளுக்கான கூடுதல் கட்டிடங்களும் கட்டுவதற்கான ஆணையினையும், தமிழ்நாடு முதலமைச்சர், பிறப்பித்து அதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், 2022-2023-ஆம் ஆண்டிற்கென, கடந்த 07.05.2022 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, சட்டப்பேரவை 110 விதியின் கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதார தேவைகளை; மேம்படுத்தும் விதத்தில், தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அமைத்திட உத்தரவிட்டார்கள்.

அதன்படி, முதற்கட்டமாக ரூ.125.00 கோடி செலவில் 500 நகர்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25.00 இலட்சம் மதிபீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திருக்கரங்களால் இன்றையதினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் விரைவில் திறக்கப் படவுள்ளன.

அதில், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சிப் பகுதியில், முத்துப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கழனிவாசல் நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் செஞ்சை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கணேசபுரம் நகர்ப்புற நலவாழ்வு மையம், தேவகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ராம் நகர் நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் சிவகங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆவரங்காடு நகர்ப்புற நலவாழ்வு மையம் என, மொத்தம் 4 நகர்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் முதற்கட்டமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மேற்கண்ட ஒவ்வொரு நகர்புற நலவாழ்வு மையத்திலும் தலா 1 மருத்துவர் 1 செவிலியர் 1 சுகாதார ஆய்வாளர் மற்றும் 1 தூய்மை பணியாளர் என, மொத்தம் 4 மருத்துவர்கள் 4 செவிலியர்கள் 4 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 4 தூய்மை பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு நலவாழ்வு மையத்திற்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் சுமார் 20000 முதல் 25000 வரை உள்ள மக்களுக்கு காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 8.00 வரையிலும் 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை “அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்” கீழ் வழங்குவதற்கான நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்” என்பது மக்களுக்கு நிதி நெருக்கடி அல்லது நிதிச்சுமை எதுவுமின்றி நோய்தடுப்பு,சுகாதார மேம்பாடு , நோய் சிகிச்சை, புணர்வாழ்வு சேவை மற்றும் நோய் ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட விரிவான மற்றும் தரமான 12 அத்தியாவசிய சுகாதார சேவைகளை பெற வழி வகுக்கும் ஒர் சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்புற நலவாழ்வு மையங்களின் மூலம் மகப்பேறு நல சேவைகள் இளம் பருவத்தினருக்கான சேவைகள் குடும்ப கட்டுபாடு சேவைகள் தொற்று நோய்களுக்கான சேவைகள் தொற்றா நோய்களுக்கான சேவைகள் கண் காது மூக்கு, பல் வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள் முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள் அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள் மனநல சேவைகள் மற்றும் யோக போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்புற மக்கள் குறிப்பாக, குடிசை வாழ் மற்றும் நலிந்த மக்களுக்கும் தரமான முறையில் பெறுவதற்கு அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நகர்புற நலவாழ்வு மையங்கள் நகர்புற ஆரம்ப சுகாhர நிலையங்களின் துணை மையங்களாக செயல்பட்டு, அனைத்து அத்தியாவசியமான ஆரம்ப சுகாதார சேவைகளை மக்கள் எவ்வித பொருட்செலவின்றி அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதோடு மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளை ஆரம்ப சுகாதார தேவைகளுக்காக மக்கள் தேவையின்றி அணுகும் சூழ்நிலையையும் தவிர்க்கிறது.

மேலும், அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்”; கீழ் திறன்பட்ட மனிதவளம், வலுவான சுகாதார கட்டமைப்பு மற்றும் மக்களின் சுகாதார உரிமைகளை பேணுதல் என்ற அடிப்படையில், நிலையான வளர்ச்சி இலக்கினை நோக்கி தமிழ்நாடு முதலமைச்சர், இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுபிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் வாயிலாக 05 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்களையும், கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.விஜய்சந்திரன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் சே.முத்துத்துரை நகர்மன்ற துணைத்தலைவர் ந.குணசேகரன், நகராட்சி ஆணையர் வீரமுத்து, காரைக்குடி நகராட்சி நகர்நல அலுவலர் மரு.திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!