சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 16.05 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 16.05 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர் பங்கேற்பு
X

சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 16.05 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 16.05 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டம், ரூ. 16.05 கோடி மதிப்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டிடம், காரைக்குடி நகராட்சி பகுதியில் அரசு சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதிக்கான புதிய கட்டிடம் மற்றும் செட்டிநாடு கால்நடை பண்ணையில் கோழிகுஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலைக்கான புதிய கட்டிடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்திடும் பொருட்டு, அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், குறிப்பாக கல்வித்துறை, மருத்துவத் துறைக்கென, அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறார்.

தமிழ்நாடு முதல்வரால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு வழங்கிவருவது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையின் சார்பில் 3.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.

எதிர்பாராத விதமாக இந்தப் பகுதியில் ஏற்படும் சாலை விபத்துகளினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்திடும் பொருட்டும், அவசர சிகிச்சை காலங்களில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலும், தற்போது இந்த மருத்துவமனை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 7 மாத காலத்திற்குள் விரைவில் முடிவு பெற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் காரைக்குடி சீர்மரபினர் கல்லூரி மாணவர்கள் விடுதிக்கான புதிய கட்டிடம் 4.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகளும் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செட்டிநாடு கால்நடை பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை, கோழிக்குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலை ஆகியவைகளுக்கென 8.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்துவரும் கால்நடைகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பல்வேறு முகாம்களும் நடத்தப்பட்டு, கால்நடைகளின் நலன் காக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் உதவியாக இருந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகியவைகளை தொடர்ந்து தற்போது கால்நடை பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதற்கென, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.16.05 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதுபோன்று பொது மக்களின் கோரிக்கைளுக்கு முன்பாகவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, உரிய பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை கருத்தில் கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடர்பாக பொது மக்கள் தங்களது பகுதிகளுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ, அல்லது என்னிடம் நேரிலோ மனுக்கள் அளிக்கும் பொருட்டு, அந்தப் பணிகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, பேரூராட்சி தலைவர்கள் கோகிலா ராணி (திருப்பத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்), திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சண்முக வடிவேலு, காரைக்குடி நகர் மன்றத்தலைவர் முத்துத்துரை, காரைக்குடி நகர் மன்ற துணைத்தலைவர் குணசேகரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!