மேலூர்- காரைக்குடி நான்கு வழிச்சாலை பணியை சிவகங்கை ஆட்சியர் ஆய்வு

மேலூர்- காரைக்குடி நான்கு வழிச்சாலை பணியை சிவகங்கை ஆட்சியர் ஆய்வு
X

மதுரை காரைக்குடி இடையே நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருவதை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலூர்- காரைக்குடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

மேலூர் - காரைக்குடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் காட்டாம்பூர், திருப்பத்தூர் சந்திப்புச்சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி - தென்கரை சந்திப்பு சாலை, சுரண்டை கண்மாய், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் மேலூர் - காரைக்குடி வரை 45.85 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 13.52 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கும் பணியும், சிவகங்கை மாவட்டத்தில் நைனார்பட்டி முதல் மானகிரி துக்கானேந்தல் வரை 32.33 கிலோ மீட்டர் சாலை ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

6 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 51-ம், 5 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 16-ம், வாகனங்கள் சாலையின் அடியில் செல்லும் வகையான பாலங்கள் 14-ம், பெரிய பாலம் 9-ம், மேம்பாலம் 1-ம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் , 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை சுத்தம்படுத்தும் பணி நிறை பெற்றுள்ளது. 16.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட மண் பரப்பும் பணியும், 13.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரண்டாம் கட்ட மேல்மண் பரப்பும் பணியும், 10.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும், 8.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இறுதிகட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும் முடிவுற்றுள்ளது. 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. மொத்தமாக 24 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

சாலை அமைக்கும் பணியில் உள்ள இடர்பாடுகளை விரைந்து களைந்து, நிலஎடுப்பு குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்கிடவும், சாலை கடக்கும் இடங்கள், சாலை சந்திக்கும் பகுதிகள் போன்றவற்றினை போக்குவரத்து விதிகளுக்கேற்றவாறும், பொதுமக்களின் வசதிக்கேற்றவாறும் அமைத்திடவும், நிலஎடுப்பு குறித்து எழும் கருத்து வேறுபாடுகளுக்கு சமரச தீர்வு வழங்கிடவும், கண்மாய்கள், குளங்கள், ஓடைகள் குறுக்கிடும் இடங்களில் மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து பணிகளை நிறைவு செய்திடவும், மின் இணைப்பு செல்லும் பாதைகள், குடிநீர் குழாய் செல்லும் பாதைகள், தொலைபேசி இணைப்பு செல்லும் பாதைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து சீர் செய்திடவும், வழக்கமான போக்குவரத்திற்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளவும், இப்பணி நிறைவு செய்ய நிர்ணயித்துள்ள காலத்திற்குள் பணியினை நிறைவு செய்திட திறன்மிக்க பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தி விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக, ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடைபெற்றதை முன்னிட்டு ஒ.புதூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடி மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது , தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் வி.நாகராஜன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!