காரைக்குடி நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம்

காரைக்குடி நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம்
X

காரைக்குடியில் மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டம்

காரைக்குடி நகராட்சியில், முழுமைத் திட்டம் தொடர்பாக கட்டுமானப் பொறியாளர் வணிகர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், காரைக்குடி நகராட்சியில் முழுமைத் திட்டம் தொடர்பாக கட்டுமானப் பொறியாளர் மற்றும் வணிக அமைப்பைச் சேர்ந்தவர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: காரைக்குடி நகராட்சியானது 2021-ன்படி, 13.5 சதுர கி.மீட்டர் பரப்பளவில், 35,382 குடியிருப்புக்களும், 1,21,441 மக்கள் வசிக்கின்றனர். இதில் 2011-ன் அரசாணையின்படி, காரைக்குடி கூட்டு உள்ளுர் திட்டக்குழுமத்தின் கீழ் கழனிவாசல், காரைக்குடி, அரியக்குடி, செக்காலைக்கோட்டை, இலுப்பக்குடி, செஞ்சை, அமராவதி, கண்ணங்குடி, வேளங்குடி, கோட்டையூர், திருவேலங்குடி, மானகிரி, கோவிலூர் போன்றவற்றை இணைத்து முழுமைத் திட்டம் ஏற்படுத்தப்படவுள்ளன. பேரூராட்சி, கிராம ஊராட்சிகளை இணைக்கும் பட்சத்தில் 72,960 குடியிருப்புக்களில் 2,34,523 மக்கள் தொகை உள்ளது.

புதிய முழுமைத் திட்டமானது அடுத்த 20 ஆண்டுகளுக்கு காரைக்குடி நகராட்சிப் பகுதிகளில் உருவாகும் மக்கள் தொகை எண்ணிக்கை, வீடுகளின் எண்ணிக்கை, கட்டுமான வளர்ச்சி போன்றவை குறிப்பிட்ட இடைவெளியில் அடையும் வளர்ச்சியினை அடிப்படையாக வைத்து முழுமைத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளன. இனிவரும் காலங்களில் காரைக்குடி நகராட்சிப் பகுதிகளில் ஏற்படுத்தப்படவுள்ள அரசு அலுவலகங்கள், புதிய கட்டுமானங்களின் தேவை, தனிமனித குடிநீர் தேவையின் அளவு, போக்குவரத்து வசதிகள், சாலை வசதி, போக்குவரத்து மேம்பாடு, வாகனம் உற்பத்தி, குடியிருப்புகள் மற்றும் சமூகப்பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மறுசுழற்சி பயன்படுத்த வேண்டிய தண்ணீர் மற்றும் குப்பைகள், கட்டிடக்கழிவுகள் குறித்து திட்டமிடப்படவுள்ளன.

மேலும், கூடுதலான மக்கள் தொகை உற்பத்தியால் ஏற்கெனவே, பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் பாதுகாத்தல், மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பசுமைப்போர்வையினை அதிகப்படுத்துதல், பாதுகாத்தல், பொதுமக்களுக்கு தேவையான பூங்காக்ககள், உடற்பயிற்சிக்கூடங்கள் போன்றவற்றை புதியதாக ஏற்படுத்திட வேண்டுதல் குறித்தும் திட்டமிடப்பட்டுவுள்ளன. இது குறித்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் பயனுள்ள திட்டங்கள் குறித்து அறிந்து முழுமைத் திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. எனவே, அடுத்து நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களின் மூலம் முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக துணை இயக்குநர் ச.செல்வராஜ், காரைக்குடி நகர்மன்றத்தலைவர் முத்துத்துரை, கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை, ஊராட்சி மன்றத்தலைவர்கள் எம்.சுப்பையா, எஸ்.சுந்தரி, ம.தமிழ்செல்வி, ஏ.சித்ரா, எம்.இராஜரெத்தினம், ஏ.ஆர்.முருகப்பன், லெட்சுமி, காரைக்குடி நகராட்சி ஆணையர் லெட்சுமணன், மேற்பார்வையாளர் ஆர்.சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!