சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை துவக்கிய அமைச்சர் உதயநிதி

சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டியை துவக்கிய அமைச்சர் உதயநிதி
X

சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை துவக்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை-2024, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், முன்னிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரசு கூடுதல் தலைமை செயலாளர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை) முனைவர். அதுல்யமிஸ்ரா, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமை நிர்வாக அதிகாரி / உறுப்பினர் செயலர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) ஜெ.மேகநாத ரெட்டி,சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் உட்பட சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , முதலமைச்சர் கோப்பை-2024 மாவட்ட அளவிலான போட்டியினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகம் முழுவதும் விளையாட்டில் சிறந்து விளங்கி வருபவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கென பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இளைஞன் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இவ்வாண்டு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது மேலும், சிறப்புக்குரியதாகும்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலும் முதலமைச்சர் கோப்பை - 2024 தொடர்பான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்றைய தினம் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில், நடத்தப்படவுள்ள போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு, அதில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள்என, 5 பிரிவுகளில் (Category) 35 வகையான விளையாட்டுக்கள் 168 பிரிவுகளில் (Total Events), மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கப்பட்டு, வரும் 24.09.2024 வரை நடத்தப்பட உள்ளது.

மேலும், இப்போட்டிகளில் மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1.இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன்முறையாக நான்காம் இடம் பெற்றவருக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக, இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தியும் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

இப்போட்டிகளில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லுாரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகள் இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துள்ளதன் அடிப்படையில், நடத்தப்படவுள்ளது.

அதன்படி, கடந்த 04.08.2024 முதல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் மொத்தம் 11,56,566 நபர்கள் இப்போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (Online Registration) மேற்கொண்டுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்விகள் என்பதை கருத்தில் கொள்ளாமல், முதலில் நாம் அதில் பங்கு கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பல்வேறு போட்டிகளில் பங்கு கொள்வதன் அடிப்படையில், தங்களது திறன்களை வெளிக்கொணருவதற்கான வாய்ப்பாக அவை அமையும். இதனைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் போட்டிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதில் வெற்றி பெற்று, அதன்மூலம் தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்