சிவகங்கை அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் கருத்தரங்கம்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடைபெற்ற தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மைக்கான கருத்தரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் ஆஷா அஜீத்
சிவகங்கை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடைபெற்ற தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மைக்கான கருத்தரங்கில் மொத்தம் 30 விவசாயிகளுக்கு ரூ.9.08 இலட்சம் மதிப்பீட்டிலான, நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மைக்கான கருத்தரங்கு, சாக்கோட்டை வட்டாரத்துக்கு உள்பட்ட அமராவதி புதூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பெயர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் , நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்றைய தினம் அமராவதி புதூரில், தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு இயற்கை விவசாயம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கின்ற வகையில் இக்கருத்தரங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
முந்தைய காலங்களில், விவசாய பெருங்குடி மக்கள் இயற்கை விவசாயத்தின் மூலம் பல்வேறு உற்பத்தி பொருட்களை தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கி,அதன் மூலம் தாங்களும் பயன்பெற்றுள்ளனர். தற்போது தங்களது உற்பத்தி பொருட்களை பாதுகாக்கின்ற வகையிலும் உற்பத்தியை அதிகப்படுத்த நோக்கிலும்,
உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை நோக்கி செல்கின்றனர். அவ்வாறாக பெறப்படும் உணவு உற்பத்தி பொருட்களின் மூலம் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இப்பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு, மீண்டும் இயற்கை விவசாயத்தினை நாம் தரமான முறையில் மேற்கொள்ள அவசியம் உருவாகிறது. இதன் மூலம் மண் ,நீர் ஆகிவைகளின் தன்மை மற்றும் தரத்தினை நாம் மேம்படுத்த முடியும்.
இயற்கை விவசாயத்தின் மூலம் தங்களின் நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பல்வேறு உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். பஞ்சகாவியம், ஜீவாமிர்தம் போன்றவற்றை எவ்வாறு தயாரிப்பது அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நாம் முறையாக அறிந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி , புதிது புதிதாக பொருட்களை உற்பத்தி செய்து, அதனை முறையாக சந்தைபடுத்தி அதன்மூலம் அதிக அளவில் லாபம் ஈட்டி பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும். சிறுதானியங்களை பயிரிட்டு, அதன் மூலப் பொருட்களைக் கொண்டு மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி சந்தைப்படுத்தி அதன் மூலமும் பயன்பெறலாம்.
மேலும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைத்து, தரிசு நிலங்களை விளைநிலங்கள் ஆக்கும் நடவடிக்கையும் அரசால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதற்கான மானியமும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சீமை கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட்டு அதன் மூலமும் பயன்பெறலாம்.
மேலும், தேனீ பெட்டிகள், காளான் வளர்ப்பு போன்றவைகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ற உரிய லாபத்தினை தாங்கள் பெற்று பயன்பெறும் வகையில் இ-நாம் என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் பதிவு செய்து, அதன் மூலமும் பயன் பெறலாம்.
இதுவரை, இ-நாம் திட்டத்தின் மூலம் பதிவு செய்யாத விவசாயிகள் பெருமளவில் பதிவு செய்து, அதன் மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.இதுபோன்று விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயன்பெறுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களை விவசாயிகள் அணுகி, பயன் பெற்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், திருப்பத்தூர், கல்லல், சிங்கம்புணரி, தேவகோட்டை, சாக்கோட்டை ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட மொத்தம் 30 விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை, பண்ணை குட்டை, நிரந்தர மண்புழு உரக்கூடம்,பரப்பு விரிவாக்கம், அங்கக வேளாண்மை சான்று,
மானாவரி பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்புக்கூடம், பல்லாண்டு தோட்டக்கலைப்பயிர்கள், நெகிழிக்கூடை மற்றும் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை கன்று ஆகியவை அமைத்தலுக்கென மொத்தம் ரூ.9.08 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், துறைரீதியான திட்ட விளக்க கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) செ. சக்திவேல், உதவி இயக்குநர்கள்,வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu