காரைக்குடி அருகே சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல்
காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சொக்கலிங்கம், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் ந.குணசேகரன்காரைக்குடி வட்டாட்சியர் ப.தங்கமணி, மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சரால் 2021-2022 ஆம் ஆண்டின் சட்டப்பேரவை நிதி அறிக்கையின் கீழ் மாநிலம் முழுவதும் விளையாட்டு திறனை விரிவு படுத்துகின்ற வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3. கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள். அதன்படி, முதற்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டும் பணியினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கழனிவாசல் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும்.தமிழ்நாடு முதலமைச்சர் , கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2½ ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
சொன்னதை செய்தது மட்டுமன்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும் முதன்மையான முதலமைச்சராகவும் திகழ்ந்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதும், புதிய செயல் திட்டங்கள் குறித்து அனைத்து அமைச்சர்களிடமும் துறை வாரியாக கேட்டறிந்தார். மேலும், தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும் அதன் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.
கல்வி, சுகாதாரம், தொழில்துறை, வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்கிடும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகள்இ அனைத்து விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி விளையாட்டு துறையை ஊக்குவித்து வருகிறார்.
குறிப்பாக, இத்துறையை சிறப்புடனும், துடிப்புடனும் வழிநடத்துவதற்கென இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமித்துள்ளார். அவர், இத்துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து செயல் திட்டங்களையும் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக திகழ்ந்து வரும் விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி, பல்வேறு வகையான விளையாட்டுக்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கிடும் பொருட்டு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென குறைந்தபட்சம் 6 அல்லது 7 ஏக்கர் நிலப்பரப்பளவில் இடம் தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு அமையவுள்ள ஒவ்வொரு சிறு விளையாட்டு அரங்கிலும் 200 மீட்டர் , 400 மீட்டர் தடகள ஓடுதளம், கால்பந்து மைதானம், கையுந்துப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கோ கோ மைதானம், கபடி மைதானம், பார்வையாளர் அமரும் இடம், விளையாட்டு உபகரணங்கள் வைப்பு அறை, அலுவலக அறை மற்றும் உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதி மற்றும் மின்வசதி போன்றவை அமைக்கப்பட உள்ளது.
இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கழனிவாசல் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை போன்று, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரையூர் பகுதியிலும், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட மாங்குளம் பகுதியிலும், சிறு விளைாயட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளும் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில், இம்மைதானங் கள் அமையும். விளையாட்டில் சிறந்து விளங்கி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, ஒன்றிய அரசுகளில் வேலைவாய்ப்பினையும் பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களில் சிறந்து விளங்கி சாதனை படைத்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு,சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த விளையாட்டு வீரர்களும் சிறந்து விளங்கி சாதனை படைத்து,இதுவரை பெற்றுள்ள சாதனைகளையும் தக்க வைத்துகொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மேலும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்திடும் வகையில் எனது சார்பில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளேன். இனியும் கூடுதலாக விளையாட்டு மேம்பாட்டிற்கான தேவைகள் இருப்பின், அதனையும் எனது சார்பில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu